Tuesday, May 24, 2016

கேபிடலிஸம், சோஸியலிஸம், கம்யூனிஸம்



ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும்.

ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாகியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது.
சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான்.

நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது?


அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான்.

ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.

ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய்.

ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய்.

எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.
மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர்.

இதைக் கண்ட இன்னொருவனுக்கு தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது.
அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று.

இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் தாங்களும் சுரங்கம் வெட்ட முனையவே... முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

ஏரியின் நீரை கிராமத்திற்கு கொண்டுவர தாங்களே முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்க தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது என கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்கு கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.

மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.
அது மட்டுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது.

இதுதாங்க முதலாளித்துவம்.

உண்மையை இப்பொழுது ஆராய்வோம்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உழைப்பு மற்றும் அறிவு.

மத்தபடி அனைத்து இயற்கை வளங்களும் அனைவருக்கும் பொது.

சாதாரண மனிதன் தன் உழைப்பினால் தினம் தினம் சம்பாதிக்கிறான்.

அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். தன்னைச் சுற்றி இருப்போரின் பிரச்சனைகளைப் பார்க்கிறான்.

அந்த பிரச்சனைகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறான். அங்கே தன் உழைப்பையும், தான் சேகரித்த செல்வத்தையும் முதலீடாக்குகிறான்.

தன்னுடைய அறிவினால் பிரச்சனைகளைக் குறைப்பதால் அவன் தான் கைவைத்த இயற்கை வளங்களை தனதாக்கிக் கொள்கிறான்.

அதாவது தனது அறிவு மற்றும் பண பலத்தினால் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளத்தைத் தனதாக்கிக் கொண்டு விற்க ஆரம்பிக்கிறான்.

அவன் உழைப்பை விற்கவில்லை. விற்றிருந்தால் அவன் அன்றாடங்காய்ச்சி ஆகியிருப்பான். அது பொதுவுடைமை தத்துவம்.

அவன் அறிவை விற்கவில்லை. விற்றிருந்தால் அது ஊர் பொதுகாரியமாக மாறி இருக்கும். ஊரே சேர்ந்து சுரங்கம் வெட்டி, மிகக் குறைந்த செலவில் தண்ணீர் அருந்தியிருப்பார்கள். பராமரிப்புசெலவிற்காகும் தொகை மட்டுமே மக்கள் செலுத்த வேண்டியதாக இருந்திருக்கும். அது சோஷியலிஸம்.

இரண்டையும் விட்டு ஊருக்கே பொதுவான இயற்கை வளம், ஊருக்கே பொதுவான நிலம் ஆகியவற்றை தனதாக்கிக் கொண்டு, பொதுச் சொத்தான இயற்கை வளத்தை விற்றதால் அவன் மிகப் பெரிய பணக்காரனாக ஆகிறான்.

இந்தப் பணம் அவன் இன்னுமொரு இடத்தில் இன்னுமொரு விஷயத்தில் முதலீடாகி இன்னும் பலமடங்கு இலாபம் தரும். இது முதலாளித்துவம்.

அதாவது முதலாளித்துவத்தில் பொதுச்சொத்துக்களை தனியார் கைப்பற்றுவதே மிக முக்கிய அடிப்படையாகிப் போகிறது. அதனால் முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடுகளில் பெரும் பணக்காரர்கள், அவர்களை அண்டிப்பிழைப்போர்கள் மற்றும் ஏழைகள் என மூன்று பிரிவினைகள் உண்டாகின்றனர்.

இவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மிக அதிகமாக இருக்கும்.

முதலாளித்துவத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிவதால் பல பெரிய காரியங்களை முதலீடு செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்களுக்கு ஆதாரம் தங்கள் உழைப்பை விற்கும் ஏழைகளும், அறிவை விற்கும் அண்டிப் பிழைப்பவர்களும்.

அறிவை விற்பவர்களை மயக்கத்தில் வைத்திருப்பதும், உழைப்பை விற்பவர்களை அறியாமையில் வைத்திருப்பதும் முதலாளிகளின் தந்திரங்கள்.

உழைப்பை விற்பவர்களும் அறிவை விற்பவர்களும் விழித்துக் கொண்டால் முதலாளித்துவம் ஒழிந்து போகும். அதை தடுக்கவே கன்ஸ்யூமரிஸம் எனப்படும் நுகர்வு மனப்பான்மை வளர்க்கப்படுகிறது. இது உலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது என்ற உண்மையை ஆழக்குழிதோண்டி புதைத்து விடுகிறது.

ஆக முதலாளித்துவத்தில் மட்டுமே பெரும் பணக்காரர்கள் உருவாகிறார்கள். அவர்கள் நாட்டின் இயற்கை வளங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள், அவற்றை விற்றே மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.

அவர்களை அண்டிப்பிழைக்கும் அறிவாளிகள் தங்கள் பங்கிற்கு முதலாளிகளுக்கு மேலும் மேலும் பணம் சேர்க்க வாய்ப்புகளை உண்டாக்கி அதில் பெறும் சன்மானங்களால் சிறிது சிறிதாக தாங்களும் முதலாளிகளாக முயற்சிக்கிறார்கள். ஆனாலும் இவர்களால் பண முதலைகளுடன் மோதி இயற்கை வளங்களை கைப்பற்ற முடியாததால் பலர் வெறும் ஜால்ராக்களாகவே முடிந்து போகிறார்கள். இங்கேதான் பெருமுதலாளிகள் ஆகுபவர்கள் செல்வத்தை மட்டுமல்லாது அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி மேல் நோக்கி பயணிக்கிறார்கள்.

ஆனால் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் முன்னேறவே முடிவதில்லை. அவர்கள் தங்கள் வம்சங்களை அறிவாளிகளாக்க முயற்சி செய்கிறார்கள்.
செல்வமும் அதிகாரமும் கைகோர்த்துக் கொண்டால் உழைப்பும் கல்வியும் அங்கே அடிமைகளாகி விடுகின்றன.

இன்று நமது நாட்டின் நிலையும் இதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. சோஷியலிஸத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம்.

No comments:

Post a Comment