Saturday, April 23, 2016

தேவதைக் கதைகள் 1

உங்க பேரக் குழந்தைகளுக்கு சொல்ல தாமரை எழுதும் கதைகள்

ஒரு வானத்தில ஒரு தேவதை இருந்திச்சாம். அந்த தேவதை கொஞ்சம் முட்டாள் தேவதையாம். தேவையில்லாம வில்லங்கத்தை விலைக்கு வாங்கிகிட்டு வருமாம், அப்படித்தான் ஒரு முறை அது ஒரு ஊரு பக்கம் போய்கிட்டு இருக்கும் பொழுது ஒரு பையன் அவங்க அம்மா கிட்ட நான் எங்கியாவது தொலைஞ்சு போறேன் பாருன்னு கோபமா கத்தினானாம்..

பாவம்பா குழந்தைன்னு அந்தத் தேவதை மந்திரம் போட்டு அந்தக் குழந்தையை ரொம்ப தூரம் தள்ளி இருக்கிற இன்னொரு ஊருக்கு போக வச்சிருச்சாம். குழந்தையைக் காணாம அம்மா அழ, அம்மாவைக் காணாம குழந்தை அழ தேவதைக்கு மயக்கமே வந்திருச்சாம்.

விசயத்தைச் தெரிஞ்சிகிட்ட தலைமை தேவதை மூணு பேருக்கு நல்ல முறையில உதவினாத்தான் தேவதை மறுபடி தேவதைகளின் உலகத்திற்கு வரலாம்னு உத்தரவு போட்டிருச்சாம்.

தேவதைக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. யாருக்காவது எதாவது உதவின்னா பரவாயில்லை, நல்ல முறையில் எப்படி உதவறதுன்னே புரியலை. அந்த தேவதை அங்க இருந்த குளத்தோரமா உட்கார்ந்து கிட்டு அழுதுகிட்டு இருந்திச்சாம்.

அப்போ அந்த நாட்டு மந்திரிகுமாரி குளிக்கறதுக்காக அந்தக் குளத்துக்கு வந்தாங்களாம். குளிச்சிட்டு திரும்பறப்போ அழுதுகிட்டே இருந்த தேவதையைப் பார்த்தாங்களாம்.

இவ்ளோ அழகா தேவதை மாதிரி இருக்கியே, உனக்கு என்னம்மா சோகம் அப்படின்னு மந்திரி குமாரி கேட்டாங்களாம். அதுக்கு தேவதை தன் கதையை முழுக்கச் சொன்னதாம்.

மந்திரி குமாரி யோசனை செஞ்சாங்களாம். சரி தேவதை.. நீங்க என்னோட வாங்க. சரியான சந்தர்ப்பங்கள் வரும் போது நான் கேட்கிற உதவிகள் மட்டும் செய்ங்க உங்களுக்கு கண்டிப்பா விமோசனம் கிடைக்க நான் வழி செய்யறேன் என்று அந்த மந்திரி குமாரி தேவதையை தன்னோட மாளிகைக்கு கூட்டிகிட்டுப் போனாங்களாம்..

அந்த நாட்டு ராஜா ரொம்ப நல்லவர் என்றாலும் அவருக்கு குழந்தை கிடையாது. அவருக்கு வாரிசும் இல்லை. இதனால நாட்டோட எதிர்காலமே கேள்விக்குறியா இருந்திச்சு. அமைச்சர் மதிவாணன் அறிவுத்திறமையும் மதியூகமும் இருக்கிறவர். தளபதியோ மிகச் சிறந்த வீரர்.

இரண்டு பேரில் அடுத்து யார் அரசுப் பொறுப்பேற்பது என்பதற்காக நாடே இரண்டா பிரிஞ்சு கிடந்தது.

மந்திரிகுமாரி தேவதைக்கு முழு கதையும் சொன்னாள். சொல்லிட்டு இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடிஞ்சா அது உண்மையிலேயே மிக நல்ல காரியம்னு சொன்னா.

தேவதையும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தது. அதுக்கு என்ன செய்யறதுன்னே புரியலை.

கொஞ்ச நாள் ஆச்சு. இராஜா ஒரு நாள் அரசசபையைக் கூட்டி அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தைச் சொன்னார். சிலர் மந்திரிதான் அடுத்த மன்னராகனும்னு சொல்ல.. சிலர் இல்லை தளபதிதான் சரியானவர்னு சொல்ல அரசவையில் விவாதக்களமா மாற ஆரம்பிச்சது.

அப்பொ இராஜகுரு அங்க வந்தாரு.. அவரு எல்லாரையும் அமைதிப்படுத்தி நீண்ட காலமா வழக்கத்தில் இருக்கிற மாதிரி பட்டத்து யானை தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து அது யார் கழுத்தில் மாலையைப் போடுதோ அவரை மன்னராக்கலாம். கரிகால் சோழன் இப்படித்தான் மன்னரானார் அப்படின்னு சொல்ல எல்லா மக்களும் ஒத்துகிட்டாங்க.

யானை தும்பிக்கையில் மாலையை எடுத்துகிட்டு நகர்வலம் வர ஆரம்பிச்சது. தேவதைக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. யானை யாருக்காவது மாலையைப் போட்டா அப்புறம் அந்த நாடு என்ன ஆகும்னே தெரியாதே..

டக்குன்னு தேவதை ஒரு மந்திரம் போட யானை நேரா மந்திரி மாளிகைக்குப் போச்சு. அங்க இருந்த மந்திரி மகள் கழுத்தில மாலையைப் போட்டது..

தேவதைக்கு அப்பதான் நிம்மதி. உடனே தலைமை தேவதை, தேவதைக்கு முன்னால தோன்றினார்.

தேவதையே நான் மூன்று பேருக்கு மட்டும்தான் உதவச் சொன்னேன். ஆனால் தகுந்த சமயத்தில் நீ செய்த இந்த காரியம் ஒரு நாட்டோட அத்தனை மக்களுக்குமே பயனுள்ளது. தன்னோட அப்பா இராஜாவகணும்னு நினைக்காம நாட்டுக்கு நல்ல அரசன் வேணும்னு சொன்ன மந்திரிக் குமாரியை விட நல்ல தேர்வு இருக்குமா என்ன?

இனி தேவதைகள் உலகிற்கு வர உனக்கு ஒரு தடையுமில்லை.. உன்னோட காரியத்தால ரொம்ப சந்தோசம். உனக்கு என்ன வேணும்னு கேளுன்னு கேட்க..

நான் மறதியால தொலைச்ச அந்த பையனை அவங்க அம்மாவோடச் சேர்த்து வைக்கணும்னு தேவதை கேட்டது.

நல்லவர்களோட சகவாசம் எவ்வளவு உயர்ந்த சிந்தனைகளைக் கொடுக்குது. நீ கேட்டபடியே அந்த பையனை அவன் வீட்டில் நான் சேர்க்கிறேன். அது மட்டுமில்லாமல் உனக்கு இன்னொரு வரமும் தர்ரேன், கேளு அப்படின்னது தலைமை தேவதை..

புத்தி கூர்மை மிகுந்த மந்திரிமகளால் தான் எனக்கு இத்தனை நல்லதுகள் நடந்தது, அதனால் மந்திரிகுமாரியிடம் நான் கல்வி மற்றும் தர்மங்களை கற்க அனுமதிக்கணும்னு தேவதை கேட்டதாம்.

தலைமை தேவதைக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம். என்ன இது என் இனிய முட்டாள் தேவதையா இப்படிப் பேசுவதுன்னு திகைச்சுப் போயிட்டதாம்.

அப்போ இந்த உரையாடல்களை மறைவிலிருந்து கவனிச்சுகிட்டிருந்த இராஜகுரு வெளிய வந்தாராம்.

தலைமை தேவதையை வணங்கி, நாட்டுக்கு நல்லது செஞ்சதுக்கு நன்றி சொல்லிட்டு, உங்க சந்தேகத்தை நான் போக்கறேன் அப்படின்னாராம்.

தேவதைகளின் தலைவியே, தேவதை முட்டாளாய் இருந்தாலும் அது சேர்ந்த இடம் நல்லவர்களின் இருப்பிடமாயிற்றே. மந்திரிகுமாரியுடன் பழகியதால் தேவதைக்கு பொதுநலனே முக்கியம் என்ற குணம் வந்தது. அதனால் அது தனக்காகன்னு ஒண்ணும் கேட்கலை.

நல்லவர்களோட சேரும்பொழுது நமக்கும் நல்ல எண்ணங்கள் வரும். புத்திசாலிகளோட சேரும் பொழுது நமக்கும் புத்திசாலித்தனம் வரும். அது மாதிரி சில நாட்கள் என்றாலும் மந்திரி மகளுடன் சேர்ந்திருந்ததால் தான் தேவதைக்கு இந்த மாற்றங்கள் வந்ததுன்னு சொன்னார்.

அதனால குழந்தைகளே, நாம நம்ம ஃபிரண்ட்ஸா தேர்ந்தெடுக்கறவங்க நல்லவங்களா, அறிவுள்ளவங்களா இருந்தா நாம் உயரலாம்.

மந்திரிகுமாரியின் ஆட்சியில் நாடு செழிக்க ஆரம்பிச்சது. தேவதையும் திருக்குறள், நன்னூல், நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது இப்படிப் பலப்பல நீதி நூல்களை கற்க ஆரம்பிச்சது.

நாடு செழித்ததால் மந்திரிகுமாரியின் புகழ் அக்கம்பக்கத்து நாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பிச்சது. பல நாட்டு மக்கள் இந்த மாதிரி ஒரு அரசு நம்ம நாட்டில நடக்காதா அப்படின்னு ஏங்க ஆரம்பிச்சாங்க,

மகத நாட்டு மன்னன் மகிபாலன் வஞ்சகன். தந்திரக்காரன். அவனுக்கு மந்திரிகுமாரியின் புகழ் பிடிக்கவே இல்லை. எப்படியும் அவர்களின் நாட்டை படையெடுத்து வெல்ல முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. எப்படியாவது மந்திரிகுமாரியை ஒழித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டினான்.

மகத நாட்டில் வனபத்ரகாளியம்மன் பண்டிகை வருடா வருடம் விமரிசையாக நடக்கும். அந்த விழாவிற்கு மந்திரிகுமாரிக்கு அழைப்பு விடுத்தான் மகிபாலன். மந்திரி குமாரியும் அந்த விழாவில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டாள்.

இரண்டு நாள் பண்டிகை முடிந்தது. மூன்றாம் நாள் விழா முடிந்த பின்னால் பூஜை முடிந்து கொடுக்கப்படும் பிரசாதத்தில் வஞ்சகமாக விஷம் கலந்து கொடுத்துவிட்டான்.

பிரசாதம் சாப்பிட்ட உடன் கொஞ்ச நேரத்திலேயே மந்திரிகுமாரி வாந்தி எடுத்து மயக்கமாக ஆரம்பித்தாள்.. மகிபாலன் எக்காளமிடுவதையும் மந்திரி குமாரியின் நிலைமையையும் மாயமாய் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதை உடனே கால தேவதையையும் கற்பனை தேவதையையும் அழைத்தது.

கற்பனை தேவதை நிலைமையை உணர்ந்து கொண்டு கற்பனையில் ஒரு மருத்துவரை படைத்தது. ஒரு பயங்காரமான பிரம்மாண்டமான மிருகத்தை கற்பனையால் படைத்து மகிபாலன் மீதும் மகதநாட்டின் மீதும் ஏவியது..

காலதேவதை காலம் போகும் வேகத்தை குறைக்க, மருத்துவர் கேட்ட மூலிகைகளை எல்லாம் கற்பனை தேவதை கற்பனையிலேயே உண்டாக்கிக் கொடுக்க கற்பனை வைத்தியர் மாற்று மருந்து கொடுத்து விஷத்தை முறித்தார்.

மகத நாடே அல்லோல கல்லோலப் படுவதைக் கண்டு பதறியது தேவதை.. எல்லாவற்றையும் நிறுத்துங்கள் என அறியது.

கற்பனை தேவதை மிருகத்தை நிற்க வைத்தது.. இவர்கள் எல்லாம் மந்திரிகுமாரியைக் கொல்ல முயற்சி செய்த நாட்டுக்காரர்கள் என்றது கால தேவதை..

இல்லை, மந்திரிகுமாரியை கொல்ல முயற்சித்தது மகிபாலந்தான், என்னதான் உயிராபத்து என்றாலும் அப்பாவி மக்களின் உயிரினைப் பலியாக்கக் கூடாது. அது தர்மத்துக்கே கேடு என்றது தேவதை

காலதேவதையும், கற்பனை தேவதையும் நம்ம தேவதையும் உயர்ந்த மனதைக் கண்டு பாராட்டின. மந்திரிகுமார்யும் தேவதையே நீ சகல தர்மங்களிலும் தேர்ந்து விட்டாய் எனப் பாராட்டினாள். மகத மக்களும் மந்திரிகுமாரியின் அடிபணிந்து தங்கள் நாட்டையும் அவளே ஆட்சி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மந்திரிகுமாரியும் ஒப்புக்கொள்ள மகத நாடும் அவர்களிம் நாட்டோடு இணைந்தன. மேலும் சிறிது காலம் தர்மம் பயின்ற தேவதை, அதன் பின்னால் மந்திரிகுமாரிக்கு தகுந்த இளவரசனை திருமணம் செய்வித்து வாழ்த்தி என் உதவி எப்பொழுது தேவையென்றாலும் என்னை நினைத்தால் வருவேன் என வரம் கொடுத்து தன் உலகம் சென்றது..

எல்லா செய்திகளையும் அறிந்த தலைமை தேவதை, நம்ம தேவதையை தலைமை தேவதை பாராட்டியது. தேவதையே தர்மம் என்பது நல்ல அறிவு, பொறுமை, கருணை, நேர்மை என பல நல்ல குணங்கள் சேர்ந்த ஒன்று நீ அனைத்திலும் சிறந்தவளாக விளங்குவதால் உனக்கு தர்ம தேவதையாக பதவி கொடுத்து மகிழ்கிறேன் என்று அறிவித்தது..

மந்திரிகுமாரியும் அவள் கணவனும் மூன்று நாடுகளையும் இணைக்க அது மிகப் பெரிய நாடாகி விட்டது, அக்கம் பக்கத்து நாட்டவரெல்லாம் அவர்களைச் சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ள, நீண்ட காலம் அவர்கள் நல்லாட்சி செய்து சுகமாய் வாழ்ந்தார்கள்.

முற்றும்.

No comments:

Post a Comment