Thursday, April 28, 2016

தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற ஐந்து சூழலியல் போராட்டங்களும், அரசியல் கட்சிகளும் #WhereIsMyGreenWorld?

லக அளவில் சூழலியல் சார்ந்த பிரச்னைகள் வெகுமக்கள் கவனத்திற்கு வந்தது, ரெய்ச்சல் கார்சன் எழுதிய மெளன வசந்தம் நூலுக்கு பின்புதான். அது நாள் வரை, இயற்கை  சார்ந்த விஷயங்கள் கவிஞர்களுக்கான பாடு பொருளாக மட்டுமே இருந்த நிலையில், ரெய்ச்சல் எழுதி, 1962 ம் ஆண்டு வெளியாகிய  ‘மெளன வசந்தம்என்ற புத்தகம், சூழலியல் சார்ந்து உலகம் எதிர்நோக்க இருக்கும் பிரச்னைகள் குறித்த அபாய எச்சரிக்கையை எழுப்பியது. அதன் பின்பு, உலகமெங்கும் சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட துவங்கினர். சாமான்யனின் குரல் உலகெங்கும் உள்ள பெரு நிறுவனங்களை, அரசை அசைத்து பார்த்தது.
அது போல், தென்னிந்தியாவிலும் ஐந்து முக்கிய வெற்றி பெற்ற சூழலியல் போராட்டங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து போராட்டங்களும் எந்த பெரிய கட்சிகளாலும் முன்னெடுக்கப்படவில்லை. எளிய மக்களால் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்ற போராட்டங்கள் அவை.


மெளன பள்ளத்தாக்கு போராட்டம் (Silent Valley Struggle):
உலகமெங்கும் சூழலியல் போராட்டங்களை முன்னெடுத்ததில், முக்கிய பங்கு கலைஞர்களுக்கு இருக்கிறது. 'கோரைப் புல் ஏரியில் வாடிவிட்டது, பறவைகள் பண்ணிசைக்கவில்லை' என்று பதறினான் கவிஞன் கீட்ஸ்.  கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , ஏறத்தாழ 175,000 மைல்கள் பயணம் செய்து, மக்களுக்கு இயற்கையுடன் இயைந்து வாழ்வது எப்படி என்று பாடம் எடுத்ததோடு, தொழில்மயமாதலின் கருப்பு பக்கத்தையும் எடுத்துரைத்துள்ளார். கலைஞர் ஜான் ருஸ்கின், லேக் மாவட்டத்தை மாசுபடுத்தும் ரயில் இருப்பு பாதை திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்துள்ளார். எழுதுவதோடு மட்டும் நில்லாமல், அவர் வேளாண் பண்ணைகளையும், கலைக் கூடங்களையும் உண்டாக்கினார்,
அது போலதான், தென்னிந்தியாவின் முக்கிய சூழலியல் போராட்டம் உலகுக்கு தெரிய காரணமாக இருந்தது, ஒரு கவிஞரின் கவிதைதான். ஆம். குந்தா, பவானி, சிறுவாணி போன்ற ஆறுகளின் தாய்மடியாக இருக்கும் மெளன பள்ளதாக்கை, நாசம் செய்ய 1973 ம் ஆண்டு, ஒரு திட்டத்தை முன் மொழிகிறது  கேரள அரசாங்கம். அந்த அடர் வனத்தில், வழிந்தோடும் நீர் நிலைகளுக்கு மத்தியில் ஒரு பெரும் அணையை கட்டி மின்சாரம் தயாரிப்பதுதான் கேரள அரசாங்கத்தின் திட்டம். பல அரிய உயிரினங்களின் கூடாக இருக்கும் அந்த அடர் வனம், இதனால் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பை முதலில் பதிவு செய்கிறார் கிண்டி பாம்பு பண்ணையை உருவாக்கிய ரோமுலஸ் விட்டேகர். அதன் பின், கேரள அறிவுஜீவிகள் இந்த திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கேரள சாஸ்தர சாகித்ய பரிஷத்என்னும் அறிவியல அமைப்பு, இவர்களுடன் கரம் கோர்க்கிறது. அப்போது சுகந்தகுமாரி என்னும் மலையாள கவிஞர்,  ‘மரத்தின்னு சுதிதிஎன்று துவங்கும் கவிதையை எழுதுகிறார். இந்த கவிதை, போராட்டகாரர்களின் தேசியக் கீதம் ஆனது. ஏறத்தாழ 12 ஆண்டுகள் நடைபெற்ற  நீண்ட போராட்டத்தின் இறுதியில் வெற்றி கிடைக்கிறது. ஆம்அந்த எளிய மக்களால் தென்னிந்தியாவில் மிஞ்சி இருக்கும் ஒரே சோலைக்காடான மெளன பள்ளத்தாக்கு, காப்பற்றப்பட்டது. 




பிளாச்சிமடை கோலா போராட்டம்:
'இங்கு கோலியாத்துகள் தாவீதுகளால் வீழ்த்தப்படுவார்கள்' என்பது உலக பொது நியதி. ஆம். வீழ்த்தவே முடியாது என்று நினைக்கப்பட்ட உலகம் முழுவதும் தன் சாம்ராஜ்யத்தை விரித்துள்ள குளிர்பான நிறுவனத்தை வீழ்த்தியது மயில்லம்மா என்னும் பாமர பழங்குடி பெண். 
2000- ம் ஆண்டுகேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடை கிராமத்தில், கோலா நிறுவனம் தன் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அனுமதியை பெற்றது. 

அவர்களுக்கு கேரள அரசு 15 ஹெக்டேர் நிலத்தை  ஒதுக்குகிறது. இந்த திட்டத்தை சந்தேக கண்ணுடனே அந்த பழங்குடி மக்கள் அணுகுகிறார்கள். ஆனால், வழக்கம் போல் வளர்ச்சியின் பாதுகாவலர்கள், 'இந்த திட்டம் வந்தால் வேலை கிடைக்கும், வளர்ச்சி வரும்' என்றார்கள். ஆனால், வளர்ச்சி வரவில்லை, வறட்சிதான் வந்தது. மேலும், ஆலையிலிருத்நு வெளியேற்றப்பட்ட கழிவு நீர்நிலத்தடி நீரை மாசுப்படுத்தியது. குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் நோயுற்றனர். 



மயிலம்மா போராட்டத்தை முன்னெடுக்கிறார். முதலில் அவருக்கு எதிராக மக்களை திருப்ப, அனைத்து ராஜதந்திரங்களையும் கம்பெனி கையாள்கிறது. அரசு அடக்குமுறையை ஏவுகிறது. ஆனால், மயிலம்மா மனம் தளரவில்லை. மக்களை ஒருங்கிணைக்கிறார், தொடர்ந்து போராடுகிறார். அந்த எளிய பெண்ணை உலகமே திரும்பி பார்க்கிறது. உலக முழுவதிலிருந்தும் செயற்பாட்டாளர்கள் அந்த சிறிய கிராமத்திற்கு வருகிறார்கள். இறுதியில் அந்த போராட்டம் வெற்றி பெறுகிறது. 

இந்த போராட்டம் இன்னொரு விஷயத்தை உலகிற்கு உணர்த்தியது. அதாவது, சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிறுவனங்களுக்கான உரிமையை ரத்து செய்யும் அதிகாரம் பஞ்சாயத்திற்கே உண்டு என்பதை. கோலா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தையும் பெருமாட்டி பஞ்சாயத்து ரத்து செய்தது.


விஸ்கோஸ் போராட்டம்:
தென்னிந்தியாவில் ஆற்றை காக்க நடந்த முதல் போராட்டம் விஸ்கோஸ் ஆலைக்கு எதிரான போராட்டம்தான். அது மிக நீண்டதொரு போராட்டமும் கூட. வரலாறுஅறுபதுகளை தொழிற் புரட்சி உண்டான வருடங்கள் என பதிவு செய்கிறது. ஆனால், அப்போது தொழிற் புரட்சி மட்டும் ஏற்படவில்லை. அது ஒரு மிகப் பெரிய சூழலியல் கேடுகளையும் கொண்டுவந்தது. அப்போது அரசும், நிறுவனங்களை வளர்ச்சியின் குறியீடாக மட்டுமே பார்த்தன. அதன் கருப்பு பக்கங்களை பார்க்க தவறின. 
சென்ற நூற்றாண்டின் மத்தியில், தமிழகத்தில் பருத்தி நூலிழைக்களுக்கு மிகப் பெரிய தட்டுபாடு  ஏற்பட்டது. அப்போது கோவையில் அதிகமாக மில்களும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம். இந்த பருத்தி நூலிழை தட்டுப்பாட்டை போக்கமேட்டுப்பாளையம் அருகே, சிறுமுகை பவானி ஆற்றின் கரையில் ரேயான் செயற்கை பட்டு இழை உற்பத்திக்காக சவுத் இந்தியா விஸ்கோஸ்என்ற பெயரில்சுமார் 300 ஏக்கரில் மிகப் பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டது. சில தசாப்தங்களில் இந்த நிறுவனம் வட இந்தியாவை சேர்ந்த வேறு பெருநிறுவனத்தின் கைக்கு மாறியது. அவர்கள் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். இயற்கைக்கு எதிரான தொழிற் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கழிவு நீர் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பவானி ஆற்றில் விடப்படுகிறது. ஆறு மாசடைய துவங்குகிறது. மீன்கள் கொத்து கொத்தாக மடிகின்றன.
90-களில் விவசாயிகள் போராட துவங்குகின்றனர். பின்பு அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர். முதலில் கள்ள மெளனம் சாதித்த நிறுவனம், சில அழுத்தங்களுக்கு பிறகு கொஞ்சம் இறங்கி வருகிறது. 'கழிவு நீரை முழுவதுமாக சுத்திகரித்து விடுகிறோம்' என்றது. ஆனால், அப்படி செய்யவில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டு போராட்டத்தின் விளைவாக, 2000 ம் ஆண்டு அந்த ஆலை முழுவதுமாக மூடப்பட்டது.
கொல்லி மலை - கஞ்சமலை - கவுந்தி வேடியப்பன் மலை போராட்டம்:
சாமான்ய மக்கள் நினைத்தால், வெறும் கல்லால் ராணுவ டாங்கிகளை வீழ்த்த முடியும் என்பதற்கான சான்று கொல்லிமலை - கஞ்சமலை போராட்டங்கள்.  வேதாந்தா நிறுவனம் எந்த அனுமதியும் வாங்காமல், கொல்லிமலையில் பாக்ஸைட் எடுக்கிறது. ஒரு நாளைக்கு நானூறு லாரிகள் விகிதம் 1996 ஆண்டிலிருந்து 2008 வரை எடுத்து வருகிறது.  அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒருவர். 2008 ம் ஆண்டு, அந்த பகுதி மக்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராக போராட துவங்குகின்றனர். இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்த்திற்கு வருகிறது. 2012 ம் ஆண்டு கொல்லிமலையில் பாக்ஸைட் எடுக்க தடைவிதிக்கப்படுகிறது.


அதுபோல், சேலம் மாவட்டம் கஞ்சமலையில், இரும்பு கனிமங்களை வெட்டி எடுக்க ஜிண்டால் நிறுவனம் முயற்சிக்கிறது. அதற்கான அனைத்து அனுமதிகளையும் பொய் தகவலகள் அளித்து வாங்குகிறது. கஞ்சமலை பல அரியவகை மூலிகைகள் இருக்கும் சிறிய மலை பகுதி. இது அழிக்கப்பட்டால் அந்த பகுதியின் சூழல் கெடும். சூழலியலாளர் பியூஸ் முன்முயற்சியில், கஞ்சமலை பாதுகாப்புக் குழு அந்த பகுதி மக்களை கொண்டே கட்டமைக்கப்படுகிறது.  ஒரு நீண்ட போராட்டத்தின் விளைவாக ஜிண்டால் இங்கிருந்து பின்வாங்கி திருவண்ணாமலை கவுந்தி- வேடியப்பன் மலைக்கு ஓடுகிறது. அங்கும் மக்கள் அதை எதிர்க்கின்றனர். அந்த மக்கள் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக இரும்பு கனிமங்களை வெட்டி எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 
மீத்தேன் போராட்டம்:

சமகாலத்தில் இளைஞர்களின் எழுச்சியை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உணர்த்திய போராட்டம் மீத்தேன் போராட்டம். திமுக அரசு டெல்டா பகுதியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க, 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி' கம்பெனிக்கு அனுமதி வழங்குகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்த பகுதியே பாலைவனமாகும் என்று பதறுகிறார்கள் விவசாயிகள். அந்த பகுதி அறிவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறு இயக்கங்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த திட்டத்திற்கு எதிராக போராடுகிறது. மக்களின் எழுச்சியை எதிர்கொள்ளமுடியாமல், அரசு இதற்கு அளித்த அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்கிறது.

அது போல், கூடங்குளம் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த போராட்டம் முழு தோல்வி என்று அரசும், கூடங்குளம் அணு உலை நிர்வாகமே கூட சொல்லாது. ஆம். அணு உலை தீமைகள் குறித்து உலகிற்கே பாடம் எடுத்துவிட்டார்கள் அந்த எளிய மீனவ மக்கள். மாற்று மின்சக்தி குறித்து தமிழகம் தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அந்த எளிய மக்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. 
இந்த போராட்டங்கள் இன்னொன்றையும் உணர்த்துகிறது. அரசியல் கட்சிகள் எந்தளவிற்கு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருக்கிறது என்பதை. இந்த அனைத்து போராட்டங்களும், எந்த அரசியல் கட்சியாலும் முன்னெடுக்கப்படவில்லை. எளிய, சாமான்ய மக்களால் முன்னெடுக்கப்பட்டது.  உலக சமத்துவம் பேசும் இடதுசாரிகள்தான் பிளாச்சிமடையில் கோலாவிற்கு அனுமதி தந்தனர்.

அரசியல் கட்சிகள் வகுத்த பாதையில் மக்கள் செல்லவில்லை. மக்கள் செல்லும் பாதையில்தான் இந்த அனைத்து போராட்டங்களிலும் கட்சிகள் சென்றன.

ஆம், எளிய மக்கள் உண்மையின் பக்கம் நிற்கும்போது, அநியாயங்கள் நிச்சயம் வீழ்த்தப்படும் என்பதற்கு இந்த போராட்டங்கள்தான் சான்று.

- மு. நியாஸ் அகமது  















No comments:

Post a Comment