Saturday, April 16, 2016

விளக்க முடியாத மோடியின் மாற்றம்

குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவரை ஆட்சி நிர்வாகத்தைத் திறம்பட நடத்தியவராக அறியப்பட்டவர் நரேந்திர மோடி. மாநிலத்தின் முழு அமைச்சரவையும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. மூத்த அரசு அதிகாரிகளுடன் முறை வைத்துச் சந்திப்புகளை நடத்தி தகவல்களை அறிந்துகொண்டார். வழக்கமான நிர்வாக நடவடிக்கைகளுடன் வேறு சில முயற்சிகளிலும் ஈடுபட்டார். மாநிலத்துக்குப் புதிய முதலீட்டை ஈர்க்க மாநாடுகளை நடத்தினார். அதிகாரிகள் ஏதேனும் முட்டுக்கட்டை போடுவதைப் போலத் தெரிந்தால், தன்னை உடனே தொடர்புகொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்குத் தன்னுடைய செல்பேசி எண்களை அளித்தார். முதலீட்டாளர்கள், அதிகாரிகள் என்று எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரைத் தொடர்புகொள்ள முடிந்தது.
பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, நிர்வாகத்தைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் அவரால் வைத்திருக்க முடியவில்லை. நாட்டின் நலனுக்கோ அரசின் நலனுக்கோ நல்லது அல்ல என்றாலும் மத்திய அமைச்சர்களால் அவர்களுடைய விருப்பப்படி பேசவும் செயல்படவும் முடிகிறது. பல்வேறு துறைகளில் முக்கியப் பதவிகள் பல மாதக்கணக்கில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. உரிய கோப்புகளைப் படித்து இறுதி முடிவெடுக்க பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை.
நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது செயல் பட்டதற்கும் பிரதமரான பிறகு செயல்படுவதற்கும் உள்ள இந்த வேறுபாடுகளுக்குக் காரணங்கள் என்ன? வெளிப்படையான ஒரு காரணம் - அளவு. இந்தியா என்பது குஜராத் அல்ல. நடுத்தர அளவுள்ள, கலாச்சாரத்தில் ஒரே அமைப்பாக உள்ள குஜராத் போன்ற மாநிலத்தின் அரசியல், நிர்வாகம் ஆகியவற்றின் மீது ஒரு தலைவரால் ஒரே சமயத்தில் தன்னுடைய ஆளுமையைச் செலுத்த முடியும். இந்தியா போன்ற நாட்டின் மீது அதே போல ஆளுமையைச் செலுத்த முடியாது. மாநில அரசைவிட மத்திய அரசு ஏராளமான துறைகளைக் கொண்டது. மாநில அரசுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பல அமைப்புகளும் நிறுவனங்களும் மத்திய அரசிடம் உள்ளன.
நரேந்திர மோடி தன்னுடைய அரசியல் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருந்தால், முதல்வர் பதவியிலிருந்து பிரதமராக மாறுவது எளிதாக இருந்திருக்கும். பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்னால் வாஜ்பாய் 2 ஆண்டுகளுக்கும் மேல் மத்திய அரசில் அமைச்சராக இருந்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற அனுபவமும் அவருக்குக் கை கொடுத்தது. எனவே, வாஜ்பாயால் தனது அமைச்சரவையையும் எதிர்க்கட்சிகளையும் திறமையாகக் கையாள முடிந்தது. மாநிலத்துக்கும் தேசத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு தொடர்பாக மோடி முன்தயாரிப்பு எதையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டார். குறிப்பாக - குஜராத் சட்ட மன்றத்தில் மேலவை கிடையாது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை இருக்கிறது.
நிர்வாகத்தின் கீழ் வரும் பிரதேசத்தின் பரப்பளவும், முன் அனுபவமும் சில பணிகளுக்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள். அதனால்தான் குஜராத்தில் மிகவும் வலுவான தலைவராக விளங்கிய அவரால், மத்திய அரசில் அவ்வளவு வலுவாகச் செயல்பட முடியாமல் இருக்கிறது. இவ்விரண்டைவிட மூன்றாவதாக - அதே சமயம் முக்கியமானதாக - ஒரு காரணம் இருக்கிறது. முதல்வராக இருந்தபோது அவருடைய கவனம் நிர்வாகம் சீராக இருக்க வேண்டும் என்பதில்தான் இருந்தது. இப்போது அவருடைய கவனம் தன்னைப் பற்றிய பிம்பம் சிதைந்துவிடக் கூடாது என்பதில்தான் இருக்கிறது.
கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலின்போது காந்திநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த லால் கிருஷ்ண அத்வானி, “எனக்குத் தெரிந்தவர்களிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மோடி” என்று பாராட்டியிருந்தார். இது பாராட்டா, வஞ்சப் புகழ்ச்சியா என்று பட்டிமன்றமே நடத்தலாம். பிரதமர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று காத்திருந்து இலவு காத்த கிளியாகிவிட்ட அத்வானி, மோடியைப் பற்றி தன் மனதில் இருப்பதைக் கொட்டிவிட்டார். தன்னைப் பிரதமராக்குவார் என்று எதிர்பார்த்திருந்தபோது, அந்தப் பதவிக்கு மோடியே தயாராகிவிட்டாரே என்ற அத்வானியின் ஆதங்கமும் அந்தப் பேச்சில் தொக்கி நிற்கிறது.
கூகுளில்தான் விடியல்
பிரச்சாரத்தின்போது பல பத்திரிகையாளர்களும் தெரிவித்த ஒரு தகவல், மோடி தினமும் காலையில் கண் விழித்ததும் கூகுளைத் தேடி ஆங்கிலம், இந்தி, குஜராத்தி பத்திரிகைகளில் தன்னைப் பற்றியும் தன் பிரச்சாரம் குறித்தும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்புகளை மேற்கொள்வாராம். அத்துடன் சமூக வலைதளங்களையும் பார்த்துவிடுவாராம். ஆனால், அப்போது அவர் திருப்திப்படும்படியாக - ஏன், மகிழ்ச்சியடையும்படியாகத்தான் அவரைப் பற்றி ஏராளமான பதிவுகள் இருந்தன. முதலமைச்சராக இருந்தபோது அவரைத் தேடித்தேடிப் பழி சுமத்தினார்கள். 2002-ல் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை அடக்கத் தவறியதற்காகவும், அவர் சொல்வதைக் கேட்டு நடக்காத அதிகாரிகளைப் பந்தாடியதற்காகவும் அவர் மீது சரம்சரமாக கண்டனக் கணைகள் பாய்ந்தன. பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கிய பிறகு, அவருடைய பேச்சுத் திறமை காரணமாகப் பத்திரிகைகளும் ஊடகங்களும் அவரைப் புகழ்ந்து தள்ளின. பிரதமர் பதவிக்கான தேர்தலை அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுக்கு இணையாக பிரச்சார பலத்தால் மாற்றியிருந்தார். நரேந்திர மோடிக்கும் ராகுலுக்கும் இடையில்தான் போட்டி என்கிறபோது யார் வெற்றி பெறுவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டது.
பிரதமராகப் பதவியேற்ற பிறகு, மோடி தனக்கு அளித்துக்கொண்ட சுய முக்கியத்துவம் மேலும் சில படிகளுக்கு உயர்ந்தது. அவருடைய உடை, தோற்றம் போன்றவற்றுக்கு அவர் அளித்த கவனம் இதைப் பறைசாற்றியது. பிறகு, வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றார். வெளிநாடுகளில் அவருக்கு உற்சாகமான மிகப் பெரிய வரவேற்புகள் அளிக்கப்பட்டன. இதனால் அவர் மேலும் தன்னைப் பற்றிய சிந்தனையில் தீவிரம் காட்டினார். வெளிநாடுகளில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் ஆதரவையும் அவர் தனக்காக மட்டுமே அளிக்கப்படுவதாக நினைக்கத் தொடங்கினார். அவை தனிப்பட்ட தனக்காக அல்ல, இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டின் பிரதமர் என்பதற்காக என்பதை ஒரு கணம் மறந்தார். இதனால்தான் மோடி - மோடி என்று எழுதப்பட்ட சூட்டை அணிந்துகொண்டார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தனக்கும் இடையே நெருக்கமான நட்பு தனிப்பட்ட முறையில் ஏற்பட்டுவிட்டது என்று பேட்டியில் கூறினார்.
டெல்லியில் இருந்த நாட்களில்கூட அவர் மட்டுமே விழா நாயகர் போன்ற நிகழ்ச்சிகளில்தான் அதிகம் பங்கு கொண்டார். இதற்கு 3 நிகழ்ச்சிகளை உதாரணமாகக் காண்போம். 2015 ஜூலையில் சர்வதேச யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியின் லுட்யன் பகுதியில் ஒரு பாயில் அமர்ந்து யோகாசனம் செய்ததுடன் உடன் செய்தஆயிரக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார். 2016 ஜனவரியில் நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. தேசிய அருங்காட்சியகத்துக்கு மோடி செல்வதையும் அங்கு பொத்தானை அமுக்கி ரகசிய ஆவணங்களை வெளியிடுவதையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடியாகக் காட்டின. அந்த ரகசிய ஆவணங்களில் எந்த ரகசியமும் இல்லை என்பதைத்தான் அவை காட்டின! சமீபத்தில் யமுனை நதிக்கரையில் உலகக் கலாச்சாரத் திருவிழாவில் கலந்துகொண்டார். உலக சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, யமுனைக் கரைச் சுற்றுச்சூழலை அழித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் அவர் கலந்துகொண்டதற்கு ஒரே காரணம், யோகாசன தினத்தைப் போல இதுவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறக்கூடும் என்று நம்பியதுதான். இதைப் போன்ற விழாக்கள் இந்தியாவில் உள்ள மக்களுக்கோ, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கோ என்ன பலனைத் தந்துள்ளன. அவர் வாக்களித்தபடி நல்ல காலம் பிறந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
பேச்சுத் திறன்
பிரதமராகப் பதவி ஏற்றது முதல் இந்நாட்டு மக்களுக்கு மோடி அளித்துள்ள ஒரே சேவை, சிறப்பாகப் பேசுவது. அவரைப் பற்றிய பழைய தகவல்கள் உண்மையானவை என்று கொண்டால், குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது திட்ட அமலில் அவர் நேரடி அக்கறை செலுத்தினார். டெல்லியிலோ புதுப்புது கோஷங்களை உருவாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அறிமுகப்படுத்திக்கொண்டே வருகிறார். பழைய கோஷம் செயலுக்கு வராமல் வாடி வதங்கும்போது புதிய கோஷம் வந்துவிடுகிறது. மிகப் பெரிய ஆரவாரத்துடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நீதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய அமைப்பு எதற்காக, எதைச் செய்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பின்போதுகூட இந்த அமைப்பிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை!
தூய்மை பாரதம் (ஸ்வச் பாரத்) என்ற கோஷத்துடன் நகரங்களைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியே நாட்டின் மிக மோசமான 10 அசுத்த நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று அரசே ஒப்புக்கொள்கிறது. இதுவரை அறிவித்த திட்டங்கள் எப்படி அமலாகின்றன என்று ஆய்வு செய்வதற்குப் பதிலாக, புதிய திட்டங்களையும் கோஷங்களையும் பெயர்களையும் உருவாக்கிக்கொண்டே செல்கிறார் மோடி.
இதற்கு முன்னால் பதவியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கைவிட உற்சாகமும் ஆற்றலும் உள்ளவராகத் திகழ்கிறார். அவரைவிட நன்றாகவே பேசுகிறார். ஆனால், பெரும்பாலும் தன்னைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார். வகுப்புக் கலவரம், சாதி மோதல்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றில் பிரதமர் தலையிட்டு தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்தால், அப்படித் தலையிடாமல் இருப்பதுடன் பேசாமலே மவுனம் சாதிக்கிறார்.
சிறுவனாக இருந்தபோது தேநீர் விற்றவர் நாட்டின் பிரதமராகப் பதவி வகிப்பதா என்ற ஆத்திரத்தில் சிலர் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்க சதி செய்வதாக ஒடிசா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னால் பேசியிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னை வானளாவப் புகழ்ந்தவர்கள் இப்போது அப்படிப் பேசுவதில்லை என்பதைத் தினசரி தன்னைப் பற்றிய தகவல்களை ஆராயும் பிரதமர் கண்டுபிடித்திருக்கிறார். தற்புகழ்ச்சியின் மறுபக்கம்தான், தனக்கு எதிரான சதி என்ற மதி மயக்கமும். ஆனால், தேர்தலின்போது அவர் வாக்களித்ததற்கும் உண்மையில் அவருடைய அரசு நிறைவேற்றியதற்கும் உள்ள இடைவெளியைத்தான் அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர். அவருடைய கோஷங்களுக்கும் பெயர் சூட்டல்களுக்கும் பிறகு அன்றாட வாழ்க்கையில் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதைத்தான் அனைவருமே பேசுகின்றனர்.
எம்.என். சீனிவாஸ் என்ற சமூகவியலாளர் ஒரு முறை என்னிடம் கூறினார், “ஊடகங்கள் நம் மீது கவனம் செலுத்துவது, நாம் எடுத்துக்கொள்ளும் கடமைக்கு முதல் எதிரி” என்று. இது அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். அரசியல் தலைவர்கள் மக்களால் உரசிப் பார்க்கப்பட வேண்டியவர்கள். எப்போதுமே தன்னைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வர வேண்டும், அதுவும் தன்னைப் புகழ்ந்தே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆபத்தானது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தால் அதுவே அவர் செய்யும் வேலையையும் தீர்மானிப்பதாகிவிடும். ஊடக வெளிச்சம் தன் மீது பட வேண்டும் என்று பிரதமர் பதவி வகிப்பவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டால், அது அவர்களுடைய கடமைக்கே முதல் எதிரியாக மாறிவிடும்.

No comments:

Post a Comment