Sunday, April 10, 2016

வைத்தியர் ஆபிரகாம் தாமஸ் கோவூர்!

இன்று ஏப்ரல் 10 வைத்தியர், எழுத்தாளர், உளவியல் அறிஞர் என பல பரிமாணங்கள் கொண்ட வைத்தியர் ஆபிரகாம் தாமஸ் கோவூர் அவர்களின் பிறந்த நாள்.

 இருளை விரட்ட ஒளி வேண்டும். அறியாமை என்ற இருளை அகற்றிட அறிவே விளக்காகின்றது.

இந்தியா இலங்கை போன்ற இடங்களில் பேய், பிசாசுகள்,  பில்லி, சூனியங்கள் என மடமையிலும் அறியாமையிலும் மூழ்கி அழிந்து கொண்டு இருந்த மக்களுக்கு கலங்கரை விளக்காக திகழ்ந்து உளவியல் தத்துவார்த்த ரீதியாக அனைத்து மன நோய்களையும் வரையறுத்து அறியாமையை போக்கி நோய்களை வியக்கத்தக்க முறையில் குணப்படுத்தி  அறிவூட்டிய பெருமை மா அறிஞர் டாக்டர் கோவூருக்கு உண்டு.

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார்.

 இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.

ஆவி, பிசாசு தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.

அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சூரியன் உள்ள பொழுது மட்டுமே இரவுகள் எம்மை அண்டுவதில்லை என்ற நிலை மாற்றி எம் மக்களுக்கு எக்காலத்திற்கும் தேவையான பகுத்தறிவு சிந்தைகளை உளவியல் நூலாகவே எழுதி அறியாமைகளை ஓட விரட்டும் அறிவு முத்துக்களாக தந்துள்ளார் வைத்தியர் டாக்டர் கோவூர் அவர்கள்.

No comments:

Post a Comment