Tuesday, April 19, 2016

தண்ணீர்த் தாய் ஆம்லா ரூயா


ராஜஸ்தான் என்றாலே சுட்டெரிக்கும் கோடை, நீர் வற்றிய நிலங்கள், உலர்ந்த மண், குடிநீரை பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கொண்டுவரும் காட்சிகள் என வறண்ட பிம்பம்தான் பெரும்பாலும் பலரின் மனத்திரையில் எழும். அதே ராஜஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என பசுமை பரவிக்கிடக்கிறது. இவற்றின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. அந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியவர், சமூக சேவகி ஆம்லா ரூயா. ஓசைப்படாது ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி வருபவர், மிகுந்த தன்னடக்கத்துடன் பேசினார்...

‘‘நான் உத்தரபிரதேசத்தைச் சேர்ந் தவள். என் கணவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 1999, 2000-களில் ராஜஸ் தானில் ஏற்பட்ட கடும் வறட்சியினால் குடிநீர்கூட கிடைக்காமல் மக்கள் படும் அவலங்களை பத்திரிகை, தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. அரசாங்கம் டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகிப்பது நிரந்தரத் தீர்வல்ல என்பது புரிந்தது. நீர் ஆதாரங்களை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று என் குடும்ப நண்பர்களிடம் கலந்து பேசி, நிரந்தரத் தீர்வாக, பாரம்பர்ய முறையில் நீர்த்தேக்கங்களை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி மழைநீரை சேகரிக்க முடிவெடுத்தோம்’’ எனும் ரூயா, களப் பணியாளர்கள், துறை வல்லுநர்களுடன் சென்று, இந்தத் திட்டத்தை கிராமத்து மக்களிடம் விளக்கிக் கூறியுள்ளார். அவர்கள் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டாலும், ஆரம்பத் தில் செயலில் ஈடுபாடு காட்டவில்லை.
‘‘மக்களின் ஈடுபாடின்மையைவிட, அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பின்மையும், அரசியல்வாதிகளின் தலையீடும்தான் பெரிய பிரச்னைகளாக இருந்தன. தடைகளைத் தகர்க்க, ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். நண்பர்களிடம் நன்கொடை வசூலித்தேன். மண்டவார் என்ற கிராமத்தில் முதன் முதலில் எங்களது சேவையைத் தொடங்கியபோது, 40 சதவிகித செலவுகளை ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய மிகவும் சிரமப்பட்டோம். 

பல தடைகளுக்கிடையில் ஒரு நீர்த்தேக் கத்தை இரண்டு மாதங்களில் ஏற்படுத்தினோம். கிராம மக்கள் எங்களைப் புரிந்துகொண்டதும், வேலை செய்வதற்கு கூலி கேட்கவில்லை. இணைந்து பணியாற்றினர். இதே முறையில் மற்ற கிராமங்களிலும் எங்கள் பணி தொடர்ந்தது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 216-க்கும் மேலான நீர்த்தேக்கங்களை ஏற் படுத்தி உள்ளோம்’’ எனும் ரூயா, இதற்காகக் கோடிகளைத் திரட்டியதையும், அந்தத் தொகை யில் பணிகளை நிறைவாக முடித்ததையும் சொல்லக் கேட்டபோது, மலைத்துப்போனோம்.
‘‘இதுவரை எட்டு கோடி ரூபாய் நன்கொடை, கிராம மக்களின் பங்காக 2.75 கோடி செலவு செய்திருக்கிறோம். சிறு மலைகள், குன்றுகள் நிறைந்த மாநிலம் ராஜஸ்தான். மலையைச் சுற்றி கரையை அமைத்தால், நீர்த்தேக்கம் தயார். கிராமத்தில் சுலபமாகக் கிடைக்கும் கற்பாறை, கப்பி, சரளைக் கல், மண், கல் சேர்ந்த கலவை, மரக்கட்டை, வைக்கோல், மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி நீர்த்தேக்கத்தை எளிதில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை முதலில் மக்கள் மனதில் விழிப்பு உணர்வு பிரசாரம் மூலம் ஏற்படுத்தினோம். பின்னர் அதை செயல்படுத்தினோம்.

ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களால், முன்பு ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்த மக்கள், தற்போது மூன்று போகம் பயிரிடுகின்றனர். தக்காளி, காலிஃப்ளவர், வெங்காயம், கத்திரிக்காய் என பலவற்றையும் பயிரிடுகின்றனர். நீர்த்தேக்கங்களைச் சுற்றி பசுமையான செடிகளை நட்டு கண்ணைக் கவரும் பூங்காக்களை ஏற்படுத்தி உள்ளனர். கால்நடை கள் வளர்க்கின்றனர். இப்படி, லட்சத்துக்கும் மேலான மக்கள் பயன்பெறுகின்றனர். ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருமானம் வருகிறது’’ என்று வியப்பு தந்தவர், 
‘முன்பெல்லாம் இந்தக் கிராம இளைஞர் களுக்கு பெண் கொடுக்கவே யோசிப்பார்கள். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. வீட்டுக்கு வீடு மோட்டார் சைக்கிள், ஒவ்வொரு கிராமத்திலும் நான்கைந்து டிராக்டர்களை காண முடிகிறது. வேலை தேடி நகரங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நிலத்தடி நீர் உயர்ந்திருப்பதால் குடிநீருக்காக பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்கத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது’’ என்றவர்,

‘‘மற்ற மாநிலங்களிலும் தற்போது எங்களது சேவையை விரிவுபடுத்தி வருகிறோம். இந்தப் பணியை இந்தியா முழுவதும் செயல்படுத்துவதுடன், உலக அளவிலும் விரிவுபடுத்துவதுதான் எங்களது நோக்கம். நல் உள்ளம் கொண்டவர்களும், பெரும் நிறுவனங்களும் உதவினால், இன்னும் பல கிராமங்கள் தன்னிறைவு அடையும்’’ என்கிறார் இந்தத் தண்ணீர்த் தாய், நாளைய தேசத்துக்கான அளவற்ற அக்கறையுடன்!

இரா.ஸ்ரீதர்










No comments:

Post a Comment