Sunday, April 10, 2016

நிலம்... நீர்... நீதி... மக்கள் கருத்துப் பகிர்வுக் கூட்டம்!

    !
டந்த ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது போன்ற வெள்ளப் பேரழிவு, எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுக்கும் வகையில் வாசன் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டின் 'நிலம்.. நீர்.. நீதி' சார்பில் நீர் நிலைகளைக் காக்க பல்வேறு பணிகளை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது.

இந்தப் பணிகளின் ஒரு கட்டமாக 'நீர்.. நிலம்.. நீதி' சார்பில், இந்திய சுற்றுச்சூழலியலாளர்கள் அமைப்பு (EFI), லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 'மக்கள் கருத்துப் பகிர்வு கூட்டம்' சென்னை லயோலா கல்லூரியில் நேற்று (9-ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சுற்றியுள்ள பள்ளிக்கரணை, மேடவாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தைத் துவங்கி வைத்துப் பேசிய லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் இன்னாசிமுத்து, "டைம்ஸ் பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு விடுத்திருந்த அறிக்கையில் மூன்றாம் உலகப் போர் நீரால் தான் உருவாகும் என்று கூறியிருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையைக் கூட சேர்த்து வைக்க முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். இதைக் கடந்து, நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு வழித்துணையாக அமையும். 
கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய இ.எஃப்.ஐ.யின் ஒருங்கிணைப்பாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, "இந்த ஆண்டின்  தட்பவெப்ப நிலை கடந்த ஆண்டுகளைவிட 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. அதைப் பற்றி நாம் அக்கறையில்லாமல் இருக்கிறோம். இங்கு, இப்போது இருக்கும் கூட்டத்தினரில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மிகவும் குறைவு. இதில் இளைஞர்களை எப்படிச் சேர்ப்பது? உங்கள் வீட்டிற்கு அருகில் ஏதேனும் ஒரு ஏரியோ குளமோ நாசப்படுத்தப்பட்டு வந்தால், நாம் ஒன்று கூடி அதை சீரமைப்போம். COMMUNITY CONSERVATION எனப்படும் உள்ளூர் மக்களை எப்படி ஈடுபடுத்த வேண்டும்? நீர் நிலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சமுதாயப் பொறுப்புணர்ச்சி நம்மில் அனைவரிடமும் இருக்க வேண்டும், இவை அனைத்தையும் பற்றிப் பேசி, உங்களுடைய சிந்தனைகளை ஒருங்கிணைக்கவே இந்த கருத்துப் பகிர்வு கூட்டம். இங்கே சிறுதுளியாக கூடியிருப்பவர்களே நாளை பெருவெள்ளமாக மாறப் போகிறார்கள்" என்றார்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த குடியிருப்புவாசியான கணேஷ் பேசும்போது, "மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமர் கோவிலுக்குப் பின்னால் ஒரு குளம் பராமரிப்பற்று இருக்கிறது. சில அமைப்புகளோடு இணைந்து தூர்வார முயற்சி செய்தோம். மக்கள் நெரிசல் மிகுந்த இதுபோன்ற இடத்தில் இவ்வளவு பெரிய குளம் இருக்கிறதா? என வியந்து பார்க்கிறார்கள். இந்த பகுதி மக்களும் இது கோவிலுக்குச் சொந்தமானதா அல்லது மாநகராட்சிக்கு சொந்தமானதா என்ற குழப்பம் இன்றும் உள்ளது. பக்கத்தில் கழிப்பிடங்கள் இருந்தும் குளத்தையே நிறைய பேர் அசுத்தம் செய்து வருகிறார்கள். இதுவரை 1 டன் அளவு குப்பைகளை இந்தக் குளத்தில் இருந்து தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து தூர்வாரினோம். இதை முழுமையாக மீட்டெடுக்க உதவிகள் தேவை" என்று கோரிக்கை வைத்தார்.

'தண்ணீர் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், அவர்கள் முன் வந்து உதவிக்கரம் நீட்டுவார்கள். அந்தத் தண்ணீர் குளத்திற்கா? அல்லது மக்கள் பயன்பாட்டிற்கா? என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என கூட்டத்தில் இருந்து எழ, "நம்முடைய வெற்றி அதை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தான் உள்ளது" என அருண் பதிலளித்தார்.

மூவரசம்பட்டுலிருந்து வந்திருந்த ஜி.பி.பாலன் பேசும்போது, "எங்கள் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 'லேக் வாக்' என்று மக்களை அழைத்துச் சென்று விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவோம். தாம்பரத்தில் இருந்து ஆலந்தூர் வரை 40 நீர் நிலைகள் உள்ளன. சிலவற்றிற்கு அருகில் வேலிக்கத்தான்கள் அதிகமாக இருக்கிறது. அவற்றை கையால், கத்தியால் வெட்டி வீச முடியாது. அதனால் ஜே.சி.பி வைத்து ஒரு நாள் வாடகைக்கு என எடுத்து அவற்றினை அகற்றுவோம். நீர் நிலைகளில் என்றும் குப்பை போடாதீர்கள் என மக்களிடம் கோரிக்கை வைப்போம். இதுபோன்ற பணிகளை செய்து வருவதால், நாங்களும் விகடனின் நிலம்.. நீர்.. நீதி.. பணிகளில் இணைய ஆர்வமாக உள்ளோம்" என்றார்.
அதன்பின் ஒவ்வொருவரும் கூட்டத்தில் முன்வைத்த யோசனைகளில் சில...

பார்த்தசாரதி (திருவொற்றியூர்):

எங்கள் பள்ளியில் படித்து முடித்துச் சென்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் பெரும் குழுவாக சேர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். சீமக் கருவேலம் மரங்களினால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். அதனால், ஒவ்வொரு வாரமும் அவற்றை அகற்றுவதற்கு சில பகுதிகளை தேர்ந்தெடுத்து கிளம்பி விடுவோம். இப்படி, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து நீர் நிலைகள் பணிகளை செய்து முடிக்கலாம்.

பாலமுருகன் (பள்ளிக்கரணை)

நீர்நிலைகள் குறித்தான விழிப்புணர்வை முக்கியமாக 5லிருந்து 8வது வரை படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். சின்ன வயதிலே விதைத்தால்தான் நீர் நிலைகள் குறித்தான பாதுகாப்பு எதிர்காலத்தில் பெருமளவில் கவனம் பெறும்.

சேகர் (அம்பத்தூர்):

கடந்த வருட மழையில் வெள்ள நிவாரணப் பொருட்களை சரியாக விநியோகிக்க முடியாமல் இருந்தது. அப்போது, எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு மெசேஜை வாட்ஸ்-அப்பில் போட்டேன். அடுத்த சில மணி நேரங்களில் 40 பேர் வந்து நின்றார்கள். இதுபோன்று வாட்ஸ்அப் குருப்களை உருவாக்கினால் பெருமளவு இளைஞர் கூட்டத்தை இந்த பணிகளுக்கு நாம் சேர்க்க முடியும். எனவே இதுபோன்று பணிகளை கையில் எடு்க்கலாம்.
ரவிச்சந்திரன் (மின்சாரத் துறை உதவி செயற் பொறியாளர்):

நம்மூரில் ஒரு நாளைக்கு ஒரு மனிதனால் 750 கிராம் குப்பை உருவாகிறது. கோவையில் 'நொய்யலை நோக்கி..' எனத் துவங்கியதைப் போல், இங்கு சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களில் மீட்டெடுக்க முயற்சிகள் எடுத்தால் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

மழை வெள்ளத்தின் போது, பெரும் பாதிப்புகளுக்கு உள்ளான ஐ.டி நிறுவனங்களும், ஆலோசனை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்கள் பங்கை அளிக்க முன்வரும். அவர்களையும் இந்த பணிகளில் இணைத்து கொள்ளலாம்.

இறுதியாகப் பேசிய அருண் கிருஷ்ணமூர்த்தி, "நம் போன்ற ஒரே எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நான் மட்டும் ஏன் குப்பைப் பொறுக்கி சுத்தப்படுத்த வேண்டும்? என நினைக்கின்றனர். அப்படியில்லாமல் இயற்கையை மீட்டு எடுக்க நம்மால் முடித்த சமுதாயப் பணியை செய்து கொண்டு இருக்க வேண்டும்" என்றார்.

'நீர்... நிலம்... நீதி...' பணிகளுக்கு அனைவரும் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டுவதாக உறுதியளித்தனர். இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள, வந்திருந்தவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துச் சென்றனர்.

No comments:

Post a Comment