Monday, April 18, 2016

`சுத்தமான இந்தியா’ - ரூ.85,800 கோடி தொழில் வாய்ப்பு!

சுத்தமான இந்தியா, சுத்தத்தை நோக்கி ஒரு அடி முன்னேற்றம். `ஸ்வாச் பாரத்’ குறித்த மத்திய அரசின் கோஷம் இது.
இந்தியாவும் சிங்கப்பூர் மாதிரி தூய்மையான நாடாக மாற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கலாம். இந்தத் திட்டத்தில் தீவிரம் காட்டும் மத்திய அரசே இதில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்பைக் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளதுதான் துரதிருஷ்டம்.ஆம், சுத்தமான இந்தியா உருவாக வேண்டுமென்றால், கழிவுகள் அகற்றப்பட வேண்டும் அல்லவா. கழிவுகள் மூலமான தொழில் வாய்ப்புகள் ரூ.85,800 கோடி.
திடக் கழிவு மேலாண்மையை ஒரு தொழிலாக அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டுதலை உருவாக்கினால் பல்லாயிரக்கணக்கான வளம் கொண்ட இத்தொழிலின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். நாடும் சுத்தமாகும்.
திடக்கழிவு மேலாண்மையில் இப்போது சிறிய அளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் சில மட்டுமே ஈடுபட்டுள்ளன. ஆனாலும் இது தொழிலாக அறிவிக்கப்படவில்லை.
இது ஒரு தொழிலாக அறிவிக்கப்பட்டால்தான் அதில் தொழில் ரீதியிலான நிறுவனங்கள் ஈடுபடும். இதனால் முதலீடுகளும் வரும். குறைந்தபட்சம் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்கும்.
சிங்எக்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இந்தியாவில் உள்ள திடக்கழிவு மேலாண்மை தொழிலில் உள்ள வாய்ப்பு, வளங்களை ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாறுபாடு உள்ளிட்ட துறைகளோடு அந்தந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 6 கோடியே 20 லட்சம் டன் திடக்கழிவு வெளியாகிறது. ஆனால் 4 கோடியே 30 லட்சம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 20 லட்சம் டன் மட்டுமே மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மற்றவை அப்படியே கழிவாகக் கொட்டி வைக்கப்படுகிறது.இவ்விதம் கொட்டப்படும் கழிவுகள் 2050-ம் ஆண்டில் 43 கோடி டன்னாக குவிந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகளில் 45 லட்சம் டன் கழிவுகள் மிகவும் அபாயகரமான கழிவுகளாகும். இவற்றில் மருத்துவக் கழிவுகளும் அடங்கும். 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும், 32 லட்சம் டன் மின்னனு சார்ந்த கழிவுகளும் ஆண்டுதோறும் வெளியாகிறது.
திடக்கழிவு மேலாண்மையில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்திய நோவோனஸ் என்ற அமைப்பு 2025-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள திடக்கழிவு நிர்வாகம் மூலம் ரூ. 85 ஆயிரம் கோடி அளவுக்கு தொழில் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இத்துறை ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளது.
மற்ற திடக்கழிவுப் பொருள் மேலாண்மையைக் காட்டிலும் தகவல் தொழில்நுட்பப் பொருள்கள் அடங்கிய இ-வேஸ்ட் ஆண்டுக்கு 10 சதவீத அளவுக்கு வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவக் கழிவுகள் 8 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இ-வேஸ்ட் சந்தை அடுத்த 3 ஆண்டுகளில் 30 சதவீத அளவுக்கு வளரும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் கணித்துள்ளது.
இந்தியாவில் வெளியேறும் குப்பைகளுக்கான சந்தை 10 கோடி டாலர் அளவுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த அளவுக்கு தொழில் வாய்ப்புள்ள துறையை `சுத்தமான இந்தியா’ - கோஷத்தை முன்வைக்கும் எவருமே கண்டு கொள்ளவில்லை என்று இத்துறையைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கழிவுகளில் பல வகை உண்டு. சில வகைக் கழிவுகளில் மதிப்பு மிக்க தாது, கனிமங்கள் இருக்கும். இத்தகைய கழிவுகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கு இதில் உள்ள பிளாட்டினம், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோக கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை மீண்டும் இந்தியாவிடமே அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்கிறார் மின்னணு கழிவுகளைக் கையாளும் முதலாவது தொழில்முறை நிறுவனமான எகோ ரீ சைக்ளிங் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பி.கே. சோனி.
இந்தியாவில் 3 கோடி பேர் கழிவுகளைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முறைசாரா தொழிலாக இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களது ஆயுள்காலம் அதிகபட்சம் 45 ஆக உள்ளது. இவர்கள் ஈட்டும் ஊதியத்தில் 30 சதவீதம் இவர்களது மருத்துவ செலவுகளுக்கே சென்று விடுகிறது என்றும் சோனி குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் கழிவு மேலாண்மைத் தொழிலை ஒரு தொழிலாக அரசு அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் இதில் உள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் இதில் ஈடுபடும் தனி நபர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வரும். மக்களும் ஒருங்கிணைந்து பணி புரிய முன்வருவர். இப்போது திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட எவரும் முன்வருவதில்லை. இதற்குக் காரணம் உரிய தொழில்முறை பயிற்சி இல்லாததுதான். திடக் கழிவுகளைக் கையாள்வதில் எந்த ஒரு பெரிய நிறுவனமும் உருவாகாததுதான்.
கடந்த 5-ம் தேதி கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு விதிமுறையைக் கொண்டு வந்தது. ஆனால் இதை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதற்கான விளக்கம் அதில் இல்லை.
இதைத் தொழிலாக அங்கீகரித்தால் தெருக்களில் குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் வேலை கிடைக்கும். தொழில் முறையில் இதை செயல்படுத்தும்போது அவர்களது வாழ்வாதாரமும் மேம்படும்.
கழிவு மேலாண்மைத் தொழில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது. ஆனால் இதை தொழிலாக அங்கீகரிப்பதற்கு நிறைய விஷயங்கள் செய்தாக வேண்டும் என்று இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கழிவுகளை அகற்றுவது எத்துறையின் கீழ் வரும் என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகிறது. உள்ளாட்சி அமைப்புகளா? நகராட்சிகளா? என்ற கேள்வி எழுகிறது. இவை அனைத்துமே மறு சுழற்சி செய்யும் அளவுக்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான நிலை.
ஊராட்சிகள் இந்த விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும். தொழில் முறையில் இதைக் கையாள்வதன் மூலம் வருவாய் கிடைக்கும். மற்ற தொழில்களைக் காட்டிலும் இதுவரை கண்டுகொள்ளாமல் விடப்பட்ட வாய்ப்புள்ள தொழில்களில் திடக்கழிவு மேலாண்மையும் ஒன்று. மின் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கு உள்ள முறைகளைப் போல, திடக் கழிவு மேலாண்மையும் உருவாக வேண்டும்.
இந்த விஷயத்தில் சுற்றுச் சூழல் அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டாலும், அதை செயல்படுத்தும் வழிவகைகளைக் காணத் தவறிவிட்டது. ஸ்வாச் பாரத் மிகவும் சரியான திட்டம். இதன் மூலம் நாடு தூய்மையடையும்போது கழிவுப் பொருள்களை திறம்பட கையாள வேண்டியதும் அவசியமாகிறது. அவ்விதம் கையாளுவதற்கு தொழில்முறையிலான அணுகுமுறை அவசியம். இந்த தொழிலை அரசு அங்கீகரிக்க வேண்டும். அப்படியான சூழல் உருவானால் பெரிய தொழில் குழுமங்கள் இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அரசின் உதவி மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும். திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உரிய இட வசதியும் கிடைக்கும். இவையனைத்தும் அமலாகும் போதுதான் சுத்தமான இந்தியாவும் சாத்தியமாகும்.
பிரதமர் தனது சக அமைச்சர்களுடன் தெருவை சுத்தம் செய்வது போல டி.வி.-க்கு போஸ் கொடுப்பது, திட்டத்தின் தொடக்கத்தை அறிவிப்பதற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் உரிய வழிகாட்டுதல் இல்லையெனில் சுத்தமான இந்தியா சாத்தியமாகாது. உடனடியாக இதை சாத்தியப்படுத்தும் வழிகளைக் காண வேண்டும் என்பதே சரியான தீர்வாக இருக்கும்.
கழிவுகளில் பல வகை உண்டு. சில வகைக் கழிவுகளில் மதிப்பு மிக்க தாது, கனிமங்கள் இருக்கும். இத்தகைய கழிவுகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கு இதில் உள்ள பிளாட்டினம், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோக கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
ramesh.m@thehindutamil.co.in

No comments:

Post a Comment