Sunday, April 10, 2016

“பூமிக்குத் தேவை... நிலத்தடி நீர்த்திட்டங்களே!”

*



*விதைகள் தட்டுப்பாடு என்ற பெயரில் மோசடி

*மரபணு மாற்று விதை, உணவுப் பாதுகாப்பை அழிக்கும்

ண்ணைக் கழிவுகள், ஆடு, மாடுகளின் சாணத்தை வைத்து விவசாயம் செய்துவந்த விவசாயிகளை, ரசாயன உரங்களுக்கு மாற்றி, கடனாளி ஆக்கியதோடு... நீர்ப்பற்றாக்குறையை சரி செய்ய ஆழ்துளைக் கிணற்றுக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகளாக தோண்ட வைத்து மீள முடியாத கடனில் வீழ்த்தி, விவசாயிகளைத் தற்கொலைக்கு விரட்டுகிறது, பசுமைப் புரட்சி. 


இன்று ஒட்டுமொத்தமாக, விளைச்சலை முடித்துக் கட்டி விட்டு, மலட்டு பூமியாகவும் வறண்ட பாலைநிலங்களாகவும் பூமி மாறி, எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்துகிறது.

இப்படிப்பட்ட சூழலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்கும் வகையில்... தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், ஏப்ரல் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், இயற்கை விவசாயக் கருத்தரங்கு நடைபெற்றது. நிலைத்த நீடித்த வேளாண் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகந்தி கருத்தரங்குக்கு தலைமையேற்றிருந்தார்.

கருத்தரங்கில் பேசிய சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர், “விதை, விவசாயிகளின் சொத்து. காலங்காலமாக விவசாயிகள் காப்பாற்றிய விதைகளை அடுத்த தலைமுறைக்கு சிந்தாமல் சிதறாமல் கொடுத்து வந்தனர். பசுமைப் புரட்சி வந்தது. கம்பெனி விதைகள் கால் பதித்தன. ஒவ்வோர்ஆண்டும் கம்பெனியை எதிர்பார்த்து விவசாயிகள் கலப்பைப் பூட்ட வேண்டிய நிலை உருவாகி விட்டது. விதை விற்பனையாளர்கள், இஷ்டம் போல விலையைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள். விதைகள் தட்டுப்பாடு என்ற பெயரில் விவசாயிகளை மோசடி செய்கின்றனர்.
இந்த மோசடி முடிவுக்கு வரும் முன்பே, மரபணு மாற்று விதைகள் (G.M seeds) என புதிய பூதம் கிளம்பிவிட்டது. இயற்கையாக பூமியில் விளைந்த விதையைக் காலி செய்துவிட்டு, சோதனைக் கூடத்தில் மூலக்கூறுகள் மாற்றி புதிய விதையை உருவாக்கி வருகின்றனர். புதிய மரபணு மாற்று மரண விதையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டால், 10 ஆண்டுகளில் உணவுப் பாதுகாப்பு முற்றிலுமாக அழிந்து, கம்பெனிகளின் ஆதிக்கத்தில் உணவுப் பாதுகாப்பு சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இதுபற்றி அரசுக்கு எந்த சிந்தனையும் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயிகளை விலை பேசி விற்பனை செய்வதிலேயே அரசு இயந்திரம் அக்கறை காட்டுகிறது 



தற்போது நீர் ஒரு பெரும் பிரச்னையாகி வருகிறது. அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மக்களும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நீரை மிகவும் பொறுப்போடு, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நீர் மாசு பட்டு விட்டது. ஆறுகள் விஷக்கழிவு நீராகி விட்டன. பூமியும் விஷமாகி விட்டது. எல்லாம் விஷம் ஆன பிறகு அதில் விளையும் தானியங்கள் மட்டும் எப்படி விஷமற்று இருக்கும்? விஷ உணவுகளை உண்பதால்தான் பெயர் குறிப்பிட முடியாத நோய்கள் வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. விஷத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால், ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் கவனமாகச் சேமிக்க வேண்டும். சிறு, சிறு நீர்தேக்கம், குளம், குட்டைகள் போதும். பெரிய, பெரிய அணைகள் தேவை இல்லை. வளமான வனப்பகுதிகளை ஜல சமாதியாக்கிவிட்டு வறண்ட பகுதிகளில் வாய்க்கால் பாசனம் செய்வது தவறு. நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்தான் பூமியை என்றும் பசுமையாக வைத்திருக்கும். பசுமை பூமியால்தான் புவி வெப்பமாதலைக் குறைக்க முடியும்என்று தெள்ளத் தெளிவாகப் பேசினார் மேதா பட்கர்.

தொடர்ந்து பேசிய இயற்கை ஆர்வலர் தேவிந்திர சர்மா, “ஏழாவது சம்பள கமிஷனுக்கு இணையாக, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்படி விவசாய வருமானக் குழு அமைக்க வேண்டும்என்பதை வலியுறுத்தினார்.

செயல்பாட்டாளர்கள் யோகேந்திர யாதவ், ஆப்ஸர் ஜாபரி உள்ளிட்ட முக்கிய வல்லுநர்கள் விவசாயிகள் சந்தித்து வரும் ஆபத்துக்களைப் பற்றி விரிவாக அலசினர். கருத்தரங்கின் ஒரு பகுதியாக விவசாயிகள் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.

கருத்தரங்கின் நிறைவில்... இயற்கைச் சீற்றங்களிலிருந்து விவசாயிகளை மீட்டெடுக்க தனியாக நிதி ஒதுக்க வேண்டும்; விளைநிலங்களை அரசு காரியங்களுக்கு கையகப்படுத்தும் போது போதிய இழப்பீடு கொடுக்க வேண்டும்; குத்தகை விவசாயிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; மரபணு மாற்று பி.டி பருத்தி இந்த ஆண்டு முற்றிலுமாகத் தோற்று விட்ட நிலையில், உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த புதிய தொழில்நுட்பமும் தேவையில்லை. இயற்கையை அழிக்காத விவசாயம்தான் தேவை; மிக முக்கியமாக, தற்கொலையில் வாழ்வை முடித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட விவசாயிகளை அரசே தத்தெடுத்து கொள்ள வேண்டும்...உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






No comments:

Post a Comment