Sunday, April 10, 2016

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?


அனைவருக்கும் பசுமை வணக்கம்!

மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவும் சமயத்தில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக மைதானத்தைத் தயார்படுத்த பல லட்சம் லிட்டர் தண்ணீரை மைதானத்தில் கொட்டி வீணடிக்கிறார்கள். இது அவசியமா?’ என்று ஒருவர் மும்பை உயர் நீதிமன்ற படியேற... இந்தக் கேள்வியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, ‘கிரிக்கெட்டைவிட, மக்களின் நலம் அவசியம்என்று கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில அரசை பலமாகக் குட்டியுள்ளது நீதிமன்றம்!

மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, நாடு முழுக்கவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது! கிடைக்கும் நீரையெல்லாம் முறையாகச் சேமித்து வைப்பதில் அரசுகள் அக்கறை காட்டாதிருப்பதுதான் இக்கொடுமைக்குக் காரணம்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இது பூகோள ரீதியாக மழைமறைவுப் பிரதேசம். இதனால்தான், நம் முன்னோர்கள் ஏரி, குளங்களை வெட்டி மழைநீரைச் சேமித்தார்கள். ஆனால், அந்த ஏரிகளில்தான் அரசு அலுவலகங்கள், வீடுகள் என்று எழும்பி நிற்கின்றன. மீதியுள்ள நீர்நிலைகளும் மண்மூடி, மேடுதட்டிக் கிடக்கின்றன.

வறண்ட மாநிலமான ராஜஸ்தானில், மழைநீரைச் சேகரித்துத்தான் வறட்சியை விரட்டி அடிக்கிறார்கள். அதை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் மழைவளம் அதிகம்தான். ஆனால், பொறுப்புள்ள ஆட்சியாளர்கள் நமக்கு வாய்க்கவில்லையே!

இந்த ஆண்டும், நல்ல மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன...என தனியார் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுதான், பெருவெள்ளமென பொங்கிவழிந்த மழைநீரைக் கோட்டைவிட்டோம். இந்த ஆண்டாவது, முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் இறங்கலாமே.

இது தேர்தல் நேரம்... புதிதாக வரும் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்என்று கைகளைக் கட்டிக் கொள்ளாமல், நாட்டைக் காப்பதற்காகவே பெரும்பெரும் படிப்பெல்லாம் படித்து, பற்பல அரசுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் உயர் அலுவலர்களே... உங்களுக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி இப்போதே நல்ல திட்டங்களைத் தீட்டி வையுங்கள். புதிய அரசு பொறுப்பேற்றதும், இந்த ஒரு விஷயத்திலாவது உண்மையை அவர்களுக்கு எடுத்து வைத்து, உரியதைச் செய்ய வையுங்கள்.

உங்கள் தலைமுறையை... இனி வரப்போகும் தலைமுறைகள் என்றென்றைக்கும் வாழ்த்தும்.

இந்த நல்ல காரியத்தையாவது செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

No comments:

Post a Comment