Wednesday, April 20, 2016

தர்மதேவதையும் அதர்ம தேவதையும்

ஒரு சின்னக் கதை.. எழுதியவர் தாமரைச்செல்வன்.... 
 
 
தர்ம தேவதைக்கும் அதர்ம தேவதைக்கும் எப்பொழுதுமே போட்டிதான்.
யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் தர்மதேவதைக்குப் பலம் கூடும். யாராவது தீய காரியம் செய்தால் அதர்ம தேவதைக்குப் பலம் கூடும்.
 
தர்ம தேவதை பல தூதர்களாக அவதாரங்களாக வடிவெடுத்து மக்கள் மத்தியிலே வந்து தர்மத்தைப் பிரச்சாரம் செய்தது. அதர்ம தேவதை அதிர்ஷ்டம், பொறாமை போன்ற வடிவங்களெடுத்து அதர்மத்தை தூண்டியது.
 
தர்மதேவதையின் கை அவ்வப்போது உயர்ந்தாலும் அதர்மம் மீண்டும் மீண்டும் பலம் பெற்றது. எனவே அதர்மத்தை தோற்கடிக்க தர்மம் யோசித்தது.
 
தர்மதேவதை இறைவனிடம், யாராவது தவறு செய்துவிட்டு, அதை உணர்ந்து வருந்தினால் அந்தப் பாவத்தை நீங்கள் மன்னித்து விடுகிறீர்கள் அல்லவா? அப்படியானால் அதர்மம் அந்த வலிமையை இழந்துவிட வேண்டும் என வேண்டியது.
 
அதர்மமும் தன் பங்குக்கு ஒரு நிபந்தனை போட்டது. யாராவது ஒரு நல்ல காரியம் செய்துவிட்டு அதைத் தான் செய்ததாக எண்ணிப் பெருமைப் படுவாரானால் அது அதர்மத்தின் கணக்கில் சேரவேண்டும் எனக் கேட்டது.
 
கடவுள் இருவருக்குமே பொதுவாகத் தலையசைத்தார். அதர்மம் இப்பொழுது தன்னுடைய மிகப்பெரிய ஆயுதமான புகழ்ச்சியைக் கையில் எடுத்தது.
 
தர்மம் என்னதான் பிரச்சாரம் செய்து நல்லதைச் செய்ய வைத்தாலும் அவர்களைப் புகழ்ந்தே ஆணவம் கொள்ளவைத்து தர்மத்தின் பலத்தை நாசமாக்கியது அதர்மம். நான் செய்தேன் என்ற போதை தலைக்கேற ஆணவம் பிடித்த அத்தனை தர்மவான்களும் அவர்களை அறியாமலேயே அதர்மத்தின் பலத்தை அதிகரித்துக் கொண்டே போனார்கள். தர்மத்திற்கு எதைச் சொல்லி தர்மத்தை நிலைநாட்டுவது எனப் புரியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டது..
 
தர்மத்தின் தோல்வி தொடங்கியது எப்பொழுது தெரியுமா? எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற ஆசை எப்பொழுது தர்மத்தின் மனதில் தோன்றியதோ அப்பொழுதே தர்மம் தோற்றுப் போய் விட்டது. இப்படித்தான் முதலில் தோன்றும்.
 
ஆனால் முதன்முதலில் போட்டிக்கு ஒப்புக் கொண்ட பொழுதே தர்மம் தோற்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் படுதோல்விக்குக் காரணமாகிப் போனது. அவ்வளவுதான்.
 
இறைவன் என்னைப் படைத்ததிற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால் அதர்மத்தையும் ஒரு காரணத்துடன் தான் படைத்திருக்கிறார் என்ற தெளிவு தர்மத்திற்கு இருந்திருக்குமாயின் தர்மம் போட்டியிடமால் தன் காரியத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்திருக்கும்.
 
இன்று போட்டியிடும் அத்தனை மதங்களும் தர்மத்தின் நிலையில்தான் இருக்கின்றன. இந்த மதம் இவ்வளவுதான் என்று மதங்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிட்டு, அதை மற்றவர் மீது திணிக்க முயற்சிப்பதால் நல்ல கருத்துக்கள் கொண்ட மதங்கள் கூட கெட்ட மதங்களாக மாறிவிடுகின்றன.
 
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.. ஒவ்வொரு உயிருக்கும் இறைவனுக்கும் இடைப்பட்ட தூரம், உறவு, உரிமை எல்லாம் சமம்தான். ஆளுக்கு ஒரு பக்கமிருந்து இறைவனை அணுகுகிறோம். ஒவ்வொரு பாதைக்கும் வித்தியாசமிருக்கும்..
மதங்கள் இறை நம்பிக்கையின் அடிப்படையில் உற்பத்தி ஆனவை. இறைவனை மேலும் மேலும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தொடர வேண்டிய பயணம். இறைவனை மற்றவரிடம் கொண்டு சேர்க்கிறேன் என எதிர் திசையில் திரும்பியதன் விளைவு தன் மதம் பற்றிய பெருமை. அப்பெருமை கர்வமாகி, கர்வம் ஆணவமாகியது.
 
கர்வத்தை எந்த மதமுமே அங்கீகரிக்கவில்லை. அந்த மதத்தையே இன்று கர்வமாக மாற்றிவிட்டதுதான் பூசல்களின் அடிப்படை. இதனால் நல்லது செய்கிறோம் என்ற எண்ணத்தில் கெடுதல்களை பெருமிதத்துடன் செய்து கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment