Thursday, April 21, 2016

'இனி மக்களுக்காக நான், மக்களால் நான்' என்று தயவு செய்து சொல்லாதீர்கள் ஜெயலலிதா அவர்களே..

ங்களுக்கு ஜோஸ் முஜிகாவை தெரியுமா...? நாம் வாழும் அதே புவியில், ஒரு வார்டு உறுப்பினரே சொகுசு கார் புடை சூழ பறக்கும் அதே கண்டத்தில் வாழும் எளிமையான அரசியல்வாதி. உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர். உருகுவே நம் சென்னையிலிருந்து பதினைந்தாயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் சின்ன நாடு.
நாம் வாக்களித்து நம் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு சரியாக ஒரு ஆண்டு முன்புதான் உருகுவே மக்கள் ஜோஸ் முஜிகாவை தம் அதிபராக தேர்ந்தெடுத்தார்கள். தாம் பெற்ற 12,000 டாலர் சம்பளத்தில், ஏறத்தாழ 90 விழுக்காடு பணத்தை வறியவர்களுக்கும், சிறு தொழிற் முனைவோருக்கும் கொடுத்த அற்புத அதிபர் அவர்.
அரசு தனக்களித்த வீட்டில் தங்காமல் இரண்டு அறைகள் கொண்ட சிறு வீட்டில் தங்கி, வார்த்தைகளில் மட்டும் மக்களுக்காக, மக்களோடு வாழாமல் உண்மையாக தம் சக குடிகளுடன் வாழ்ந்த எளிய மனிதர் அவர். தமக்கென எந்த சேவகர்களையும் வைத்துக் கொள்ளாமல், தம் வேலைகளை தாமே செய்த மக்கள் பணியாளர் அவர். 
சரி ஒரு ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். கடல் கடந்து ஏக்கப்பட்டது போதும், நாம் வாழும் நிதர்சனத்தை கொஞ்சம் பார்ப்போம். புரட்சி, அரசியல், அரசியல்வாதி போன்ற சொற்கள் கெட்ட வார்த்தைகளாகி போன அல்லது வன்புணர்வு செய்யப்பட்ட நம் தமிழ்நாட்டின் நிலையை பார்ப்போம். 

நம்மிடமும் ஒரு முதல்வர் இருக்கிறார் அல்லவா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய, எண்ணூறு ஏக்கர் பரப்பளவில் எளிய வாழ்க்கை வாழும் மக்கள் சேவகர். வாக்கு சேகரிக்க கூட விமானத்தில் பறக்கும் மக்கள் பணியாளர். தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களே சந்திக்கும் மக்கள் முதல்வர். மக்களை எப்போதும் வாக்காளராக மட்டுமே பார்த்து பழகிய முதல்வர். அவரை கொஞ்சம் திறனாய்வோம்.  அரசியல், தேர்தல் என்பதையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு ஒரு சக குடியாக அல்லது அவரது பார்வையிலேயே ஒரு சக வாக்காளனாக அவரை கொஞ்சம் திறனாய்வோம். 
வெயில் என்றால் வெளிச்சம் மட்டும் அல்ல:

24 மணி நேரமும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே வாழும் நம் மாண்புமிகு முதல்வருக்கு, வெயில் என்றால் வெறும் வெளிச்சம் மட்டும்தான். வெயில், ஒளிமட்டும் தருவதல்ல என்று அவருக்கு சொல்லும் தைரியம் அவர் சகாக்களுக்கு இல்லாத காரணத்தினால், அரசியல் வாழ்க்கைக்கு வந்தபிறகு வெயிலின் வெம்மையை உணராத காரணத்தினால் வெயில் என்றால் வெறும் வெளிச்சம் மட்டும்தான் என்று அவர் பொருள் கொண்டுவிட்டார்.
பிரசார மேடையிலேயே எட்டு ஏர் கூலர் வைத்து தன் சாதனைகளை விளக்கும் அவருக்கு நிச்சயம் வெயில் என்றும் கொடும் வெம்மை, ஆளைக் கொல்லும் வெம்மை என்று எப்போதும் தெரிய வாய்ப்பே இல்லை. இந்த வெம்மையை உணர அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கார் கண்ணாடி கதவைத் திறந்து வைத்தாலோ அல்லது வெயிலில் ஒரு நிமிடம் நின்றாலோ கோடையின் மிக மோசமான  புற ஊதா கதிர்களை உணர்ந்திருக்க முடியும்.

உங்கள் பிரசாரமும், நால்வரின் மரணமும்:
வாட்ஸ் ஆப்பில் ஒரு பிளாக் ஹியூமர் வகையை சேர்ந்த அந்த மீம்ஸ் வேகமாக பரவுகிறது.  “அ.தி.மு.க. பிரசாரத்துல நான்கு பேரு செத்து போயிட்டாங்களே...?” “ஆமாம். அவங்க எல்லாம் முன்னாடியே செத்து இருக்க வேண்டியவங்க அம்மாவுக்காக காத்து இருந்தாங்க...?” - விரக்தியின் விளிம்பில் இருந்து இதை பகிர்கிறான் அனைத்திற்கும் பழக்கப்பட்டு, இதையும் தன் விதி என்று நொந்து போன பாமரத் தமிழன்.
இறந்த நான்கு பேரும், உங்கள் பிரசார யுக்தியின் தோல்வியை மட்டும் சொல்லவில்லை, உங்கள் ஆட்சியின் நிர்வாகத்தின் தோல்வியின் சாட்சிகள் அவர்கள். 'இறந்த நான்கு பேரும், உங்களை நேரில் பார்க்க துடித்து வந்தவர்கள்' என்று உங்கள் சகாக்கள் யாராவது துதிபாடினால் நம்பிவிடாதீர்கள். நீங்கள் அவ்வளவு முட்டாளாக இருக்க மாட்டீர்கள் என்று தீர்க்கமாக நம்புகிறேன். ஆம். உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள் யாரேனும் இன்னும் அதிமுகவில் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள், இந்த கூட்டத்தை கூட்ட அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று.
அனைத்தும் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்ட கூட்டம். ஒரு வெள்ளந்தி மனுஷி, 'எனக்கு இருநூறு ரூபாய் கொடுத்தார்கள்' என்று வாக்குமூலம் அளிக்கும் வீடியோ யூ டியூபில் உலாவுகிறது. அதாவது, வெயிலைகூட பொருட்படுத்தாமல், வெறும் இருநூறு ரூபாய்க்காக எட்டு மணி நேரம் காத்திருக்க ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது என்றால் அவர்கள் எவ்வளவு பொருளாதார அழுத்தத்தில் இருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
தன் பிள்ளைக்கு பால் பவுடர் வாங்க, மின்சார கட்டணம் கட்ட, பணம் சேமிக்க, ஏன் அடுத்த வேளை உணவிற்காக அந்த பணம் பயன்படலாம் என்று கூட அந்த மக்கள் வந்திருப்பார்கள்.  இல்லை, பணம் வாங்கியவுடன் ஆண்கள் எல்லாம் மதுபானக்கடைகளுக்குதான் சென்றார்கள் என்றால், இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்கப் போகிறது.

இது பெருஞ் சோகம் இல்லையா...? இதற்கு என்ன சப்பைக்கட்டு கட்டப் போகிறீர்கள். நீங்கள் சிறை சென்ற காலக்கட்டத்தில் இறந்த முன்னூற்று சொச்சம் பேரும், நீங்கள் சிறை சென்ற அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று சொல்லியது போல், நீங்கள் இதற்கு என்ன காரணம் சொல்ல போகிறீர்கள்? உங்களை பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டார்கள் என்று காரணம் கற்பிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 
ஒரு ஊடகவியலனாக,  உங்கள் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு வந்திருக்கிறேன். மாலை 4 மணிக்கு கூட்டமென்றால், மக்கள் 10 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும். ஆறு மணி நேரம் மக்கள் படும் பாடு என்ன என்று சக வாக்காளனாக நீங்கள் என்றாவது உணர்ந்து இருக்கிறீர்களா? 

இங்கு சொல் என்பது வெறும் வார்த்தைகளால் கட்டப்பட்டது மட்டுமல்ல, அதற்கு ஒரு அதிர்வும், ஆற்றலும் இருக்கிறது. 'அம்மா' என்ற சொல் பேராற்றல் உடையது. நீங்கள், உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும், அந்த ஆற்றலை உணர்ந்தவராயின், நீங்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் ? எந்த தாயும் தனது பிள்ளைகள் சுட்டுப்பொசுக்கும் வெயிலில் கருகிச் சாவதை விரும்பமாட்டாள்.
உங்கள் மகன்கள் செத்ததற்கும், உங்கள் மகள்கள் வெயிலில் வதைப்படுவதற்கும் நீங்கள் சொல்லும் சமாதானம்தான் என்ன? நான்கு வாக்கு போய் விட்டது என்றளவில்தான் உங்கள் வருத்தமா  இல்லை உங்களுக்காக வாக்களிப்பதும், உங்களுக்காக சாவதும் தான் தமிழ் பிரஜைகளின் தலையாய கடமை என்று நினைத்துவிட்டீர்களா ? 'போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்' என்பது போல் வெயிலென்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் என்கிறீர்களா ?
வெயிலில் காய்வதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறுவது நல்லதுதான். வெயிலில் நீர் போகலாம், உயிர் போகலாமா ? மிகை மழையிலும், அதி வெயிலிலும் மக்கள்படும் துன்பம் ஏன் இத்தனை ஆண்டு காலமாக உங்களுக்கு புரியவே மாட்டேன் என்கிறது. 

இது தேர்தல் காலமாக இல்லமல் இருக்குமாயின், நிச்சயம் நீங்கள் சென்னையில் இருந்திருக்கமாடீர்கள். குளிரூட்டப்பட்ட அறையில் படறும் சிறு வெப்பத்தைக் கூட தாங்கி கொள்ள முடியாமல், கொடநாடு போகும் நீங்கள், உங்கள் குடிகளின் கஷ்டத்தை உணர்வது எப்போது ? மாயத்திரையை விலக்கிவிட்டு தமிழகத்தை பார்ப்பது எப்போது ?

உங்களை நீங்களே தகுதி இறக்கம் செய்து கொள்ளாதீர்கள்:
நீங்கள் ஆங்கிலத்தில் மிகப் புலமை வாய்ந்தவர், அதனால் உங்களுக்கு தெரிந்த மொழியிலேயே சொல்கிறேன், For every action, there is an equal and opposite reaction". நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ மோசமான வினைகளை அறுவடை செய்ய விதைகளை தூவிக் கொண்டே செல்கிறீர்கள். சூரியன், சின்னத்தில் மட்டும் அல்ல, நிஜத்திலும் உங்களுக்கு மோசமான எதிரி ஆகிவருகிறது. கொடும் வெயிலில் பிரசாரத்தை வைப்பது மக்களுக்கு செய்யும் அநீதி. அதை பற்றி எனக்கு கவலையில்லை என்று உங்களை நீங்களே தகுதி இறக்கம் செய்து கொள்ளாதீர்கள்.   
வெயிலின் வெப்பத்தை கணிக்க பெரும் சிரமப்படவேண்டியதில்லை. வானிலை ஆய்வு மையம் உங்களுக்கு அனைத்து தரவுகளையும் தந்திருக்கும், அப்படி இல்லை என்றால் அதற்கான பல ஆப்கள் இருக்கிறது.  ஆராய்ந்து பார்த்ததில் நாளை  மறுநாள் நீங்கள் பிரசாரம் செய்ய இருக்கும் திருச்சியில், இந்த வாரத்திலேயெ அதிக வெப்பம் இருக்கப் போகிறது (41 டிகிரி).
இதில் நம்பிக்கை இல்லையென்றால் வானிலை ஆய்வு மையத்தை விசாரித்து பாருங்கள். நீங்கள் உங்கள் குடிகளுக்கு அல்லது உங்களை தாயாக மதிக்கும் தொண்டர்களுக்கு செய்யும் பேருதவி, உங்கள் பிரசாரத்தை தள்ளி வைப்பது அல்லது நேரம் மாற்றுவது.
உங்களை ஜோஸ் முஜிகாவை போல் வாழ சொல்லவில்லை. சொகுசான பங்களாவில் வாழ்வதை யாரும் குறை சொல்லவில்லை. பணியாளர்களை வைத்துக் கொள்வதை பழிக்கவில்லை. சாமான்ய தொண்டனின் சிறு விருப்பமாக இருப்பது, அவனின் கஷ்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான். 

இதை செய்தால் மட்டுமே, நீங்கள் கூறும் “மக்களால் நான்; மக்களுக்காக நான்' என்ற வாக்கியம் முழுமை பெறும். இப்போது  மக்களின் முறை, உங்கள் தொண்டர்களின் முறை. அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள்.செய்வீர்களா... நீங்கள்  செய்வீர்களா...?








2 comments:

  1. Well, I am tired of reading soft articles on Politicians. Time has come everyone should write little more aggressively asking questions on bigger and relevant issues.

    ReplyDelete
  2. Well, I am tired of reading soft articles on Politicians. Time has come everyone should write little more aggressively asking questions on bigger and relevant issues.

    ReplyDelete