Wednesday, April 13, 2016

இருளர் இனத்தின் இரண்டு தீபங்கள்


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் தாண்டி பாலவாக்கத்துக்கு அருகில் இருக்கிறது ஜெ.ஜெ. நகர் இருளர் குடியிருப்பு. 15 ஆண்டுகளுக்கு முன்னர், அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட  இருளர்கள் மட்டுமே வாழும் சிறிய ஊர். மொத்தம் 500 குடும்பங்கள். இன்னமும் அடிப்படை வசதிகளோ கல்வியோ போய்ச் சேராத இந்தக் கிராமம், ‘சென்னைக்கு மிக மிக அருகில்’ இருக்கிறது. 

``இப்பத்தான் கொஞ்ச நாளா ஒரே ஒரு பஸ் எப்பயாவது வருதுங்க. அதுவும் நாலு நாளா வரலை. பஞ்சர்போல!’’ என, சோகத்தைக்கூட கேலியாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் மக்கள். அரிசி ஆலைகளில் இருந்து மீட்கப்பட்டும், இன்னமும் அரிசி ஆலைகளுக்கும் சிப்காட்டின் தொழிற்சாலைகளுக்கும் கூலிகளாகத்தான் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். 

ஊருக்குள் நுழையும்போதே ‘குரு பிரம்மா... குரு விஷ்ணு... குரு தேவோ...’ எனக் குழந்தைகள் கூட்டாக மந்திரம் சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. குரல் வந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு சிறிய குடிசைக்கு வெளியே மண் தரையில் சிறுவர் சிறுமியர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவில் ஒரு சிறுமி எழுந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். முயல்-ஆமை கதையை ஆங்கிலத்தில் திக்காமல் திணறாமல் சொன்னவள், ஒரு வரியை மறந்து போகிறாள். மாணவர்கள் மத்தியில் கிசுகிசுப்பு. சட்டெனச் சுதாரித்துக்கொண்டு கதையை நினைவுபடுத்தி, விட்ட இடத்தில் இருந்து மளமளவெனச் சொல்லத் தொடங்க... கைதட்டல்களை அள்ளுகிறாள் அந்தப் பாப்பா.

அவள், இருளர் இனத்தைச் சேர்ந்த ‘முதல் தலைமுறை’ பள்ளி மாணவி. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கே தயங்கும் அந்தச் சிறிய சமூகத்தில், 60 குழந்தைகளை தன் சொந்தப் பிள்ளைகள்போல படிக்கவைக்கிறார்கள் பூபாலன்-சரண்யா தம்பதி. 

இந்த இருளர் கிராமத்தில் முதன்முதலாக ப்ளஸ் டூ முடித்தவர் பூபாலன். முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்து, நர்ஸிங் டிப்ளமோ படித்தவர் சரண்யா. 

‘`எக்ஸாம் ஆரம்பிக்கப்போகுதுல. அதான் ரொம்ப ஆர்வமா படிச்சிக்கிட்டு இருக்காங்க’’ என்று மாணவர்களை நமக்கு அறிமுகப்படுத்து கிறார்கள் இருவரும். 

‘`இதை ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் இருக்கும். ஆரம்பத்துல, பசங்க யாருமே வர மாட்டாங்க. மொத்தமே பத்து பதினைஞ்சு பேர்தான். அவங்களையும் நாங்கதான் வீடு வீடாப் போய்க் கூட்டிட்டு வருவோம். பெற்றோர்களே விட மாட்டாங்க. பசங்க கொஞ்சம் வளர ஆரம்பிச்சதுமே ஸ்கூலுக்கு அனுப்புறதை நிறுத்திடுவாங்க. `கூலி வேலைக்குப் போனா, நாலு காசு கிடைக்கும்ல'னு சொல்வாங்க. சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிவைப்பாங்க. அவங்களுக்கு அஞ்சாவது, எட்டாவதுகூட அதிகமான படிப்புதான். டென்த் முடிச்சிட்டாலே பெரிய வேலை கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு அப்பாவியான ஜனம் சார் இது. 

2008-ம் வருஷத்துல நாங்க மொத்தமே ஏழு பேர்தான். நாலு பசங்க, மூணு பொண்ணுங்கனு ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்தோம். எங்களுக்கு நாங்களே பாடம் நடத்திக்குவோம். இவங்க (சரண்யா) டென்த் முடிச்சிட்டு நர்ஸிங் பண்ணாங்க. என்னோட படிச்சிக்கிட்டு இருந்த பசங்கள்ல ரெண்டு பேர் ஃபெயிலாகி படிப்பை விட்டுட்டு, கூலி வேலைக்குப் போயிட்டாங்க. நான் மட்டும்தான் ப்ளஸ் டூ முடிச்சேன். அதுக்கு மேல என்ன படிக்கணும், எப்படிப் படிக்கணும்னு சொல்லித்தர ஆளும் இல்லை; காசு, பணமும் இல்லை. அதனால அதோடு படிப்பை நிறுத்திட்டேன்.
நாங்க ரெண்டு பேரும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் ஸ்கூல்ல படிச்சோம். அப்ப இருந்தே எங்க ரெண்டு பேருக்குமே ஒரு எண்ணம் இருந்தது. நம்ம சமூகம், கல்வியறிவு இல்லாததால் தான் இப்பவும் அடிமை மனோபாவத்தோட இருக்கு. அதை மாத்தணும். அதுக்கு, கல்விதான் ஒரே வழினு நினைச்சோம். அதுக்காகதான் இந்த டியூஷனை ஆரம்பிச்சோம். பத்து பேரோடு ஆரம்பிச்ச டியூஷன்ல, இப்போ அறுபது பேர் இருக்காங்க. எங்களைப் பார்த்து பக்கத்து ஊர்கள்லகூட இதே மாதிரி டியூஷன் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதைவிட வேற என்ன வேணும்?’’ என, தெளிவுடன் பேசும் பூபாலனுக்கு வயது 24. சரண்யாவுக்கும் அதே வயதுதான். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இன்னமும் கூலி வேலைக்குத்தான் போய் வருகிறார் பூபாலன். பெரிய வருமானம் எதுவும் இல்லை. 

‘`நல்ல வேலை கிடைக்குமானு தேடிக்கிட்டே தான் இருக்கார். ஒண்ணும் கிடைக்கலை. அதனால கிடைச்ச வேலை எல்லாம் பண்ணுவார். ரைஸ் மில்லுல ரெண்டு நாள் கண்ணுமுழிச்சு வேலைபார்த்தா, கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை வெச்சு ஒரு வாரத்துக்கு சமாளிப்போம்’’ என சரண்யா சொல்ல, பூபாலன் ``இதை எல்லாம் எதுக்குச் சொல்ற?'' எனத் தடுக்கிறார். 

இருப்பதைக்கொண்டு சிக்கனமாக அந்த மிகச் சிறிய குடிசையில் இருவரும் வாழ்கிறார்கள். குடிசைக்கு மேல் தார்பாய் போட்டு மூடப் பட்டிருக்கிறது. இருந்தும் இரவு நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து விளக்கொளி வெளியே கசிகிறது. `மழை வெள்ளம் வந்தபோது மொத்தமும் போய்விட்டது' என்றார்கள். இப்போது ஒட்டுப்போட்டு வாழ்வதாக சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள். 

‘`மழை வெள்ளம் வந்து வாசல்ல தண்ணி நிக்குது. பசங்க கும்பலா வந்து, `அக்கா... எப்போ டியூஷன் ஆரம்பிக்கலாம்?'னு நிக்குதுங்க. என்ன பண்றதுனே தெரியல’’ என்று சிரிக்கிறார்கள் இருவரும். 
‘`எங்களைத்தான் நாங்க உதாரணமா காட்டுவோம். நாங்க மேலே படிச்சிருந்தா இப்போ இப்படி இருந்திருக்க மாட்டோம்னு சொல்வோம். அவங்க பெற்றோர்களுக்கு கல்வியின் அவசியத்தைச் சொல்லிப் புரியவைப்போம். பசங்களை அனுப்பலைன்னா வீட்டுக்கே போய்க் கூட்டிட்டு வருவோம். இப்போ பரவாயில்லை. அவங்களே குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டுட்டுப் போறாங்க. ஆனா சில முதலாளிங்க, `இதுங்க படிச்சு என்ன ஆகப்போகுதுங்க? வேலைக்கு அனுப்பு, கூலியாவது தேறும்'னு பசங்களைப் புடிச்சுக்கிட்டுப் போயிடுவாங்க. நம்மால ஒரு அளவுக்கு மேல தடுக்கவும் முடியாது. முடிஞ்ச வரை பசங்களைக் காப்பாத்தி படிக்க வெச்சிக்கிட்டு இருக்கோம்’’ என்று வருத்தமாகச் சொல்கிறார் சரண்யா.


`இங்கே 1-ம் வகுப்புல இருந்து 10-ம் வகுப்பு வரைக்கும் குழந்தைங்க படிக்கிறாங்க. இவங்களுக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு பாடம் நடத்துறோம். ஏதாவது சின்னச் சின்னப் பொருட்கள் பேனா, பென்சில், நோட்புக்குனு தேவைப்பட்டா எங்க காசுலயே வாங்கித் தந்துடுவோம். யூனிஃபார்ம் மாதிரி தேவைப்பட்டா ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர்கிட்ட பேசி வாங்கித் தந்துடுவோம். பத்து, பன்னிரண்டாவது படிக்கிற பசங்களுக்கு நோட்ஸ் தேவைப்படும். அதையும் வாங்கிக் குடுப்போம். 

முன்னாடி எல்லாம் இங்கே பிளாக்போர்டுகூடக் கிடையாது. இதோ, இந்தக் கதவுலதான் கரிக்கட்டையால எழுதி பாடம் நடத்துவோம். சமீபத்துல எங்களோட இணைந்த சரவணன்தான் கரும்பலகை வாங்கித் தந்தார்’’ என்று சரவணன், ராஜா என இரண்டு இளைஞர்களை அறிமுகப் படுத்திவைக்கிறார் பூபாலன். வக்கீலாக இருக்கும் சரவணனும், காவலராக இருக்கும் ராஜாவும் இந்த இருவர் அணியில் புதிதாக இணைந்துள்ளனர். 

‘`எங்களால முடிஞ்ச உதவிகளை இவங்க ரெண்டு பேருக்கும் பண்ணிக் குடுக்கிறோம். பாடம் எடுக்க ஆசிரியர்களை ஏற்பாடு பண்ண முடியுமானு பார்த்துக்கிட்டு இருக்கோம்’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார்கள். 

‘`பசங்களுக்கு, எங்களுக்குத் தெரிஞ்சதை மட்டும்தான் சொல்லித்தர முடியுதுனு ஒரு சங்கடம் இருக்கு. இப்ப இருக்கிற பல பாடங்கள் எங்களுக்கே தெரியாது. நாங்க படிச்சப்ப இல்லாதது. நல்லா படிச்சவங்க, ஆங்கிலம் தெரிஞ்சவங்க பாடம் எடுத்தா நல்லா இருக்கும். பத்தாவது, ப்ளஸ் டூ-க்கு மேத்ஸ், சயின்ஸ் எல்லாம் கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லித்தரணும்’’ என்கிறார் சரண்யா. 
‘`பசங்க, மண்ல உக்காந்து படிக்கிறாங்க. மேல கூரைகூட இல்லை. மழை, வெயில், கொசுக்கடி எல்லாத்துக்கும் நடுவுலதான் படிக்கவேண்டி யிருக்கு. ஒரு கூரை வேணும். கொஞ்சம் பெரிய லைட் வைக்கணும். ஒரே ஒரு லைட்தான் இப்போதைக்குப் போட்டிருக்கோம். அதனால முடிஞ்ச வரைக்கும் ஏழு மணிக்குள்ள பாடத்தை எடுத்துமுடிச்சு அனுப்பிருவோம். அதுக்காகத்தான் பணம் சேர்த்துக்கிட்டு இருக்கோம்’’ என்கிறார்கள். 

``இத்தனை வறுமையிலும் எப்படி இதைத் தொடர்ந்து செய்ய முடிகிறது?'' 

‘`வறுமைதான்; கஷ்டம்தான். சமயத்துல பாக்கெட்ல பத்து காசுகூட இருக்காது. ஆனாலும், நாங்க இதைவிட மோசமான நிலைமையில கொத்தடிமைகளா பசியும் பட்டினியுமா இருந்திருக்கோம். எங்க அன்றாடத் தேவைகளுக்காக இன்னமும் போராடிக்கிட்டுத்தான் இருக்கோம். இந்த நிலை எங்களுக்குப் பிறகு வரக்கூடிய எங்க குழந்தைங்களுக்கு வரக் கூடாது. அதுக்கு, கல்வி ஒண்ணுதான் ஒரே வழி. அதுக்காக நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம்’’ உறுதியுடன் ஒலிக்கிறது அந்த இளம் தம்பதியின் குரல்!




No comments:

Post a Comment