Sunday, April 17, 2016

வானவில் வாழ்க்கை - சிறுகதை


"போறா பாரு!"

"யாரு? அவதானே?"

"ஆமாமாம், அவதான்!"

"கொஞ்சங்கூட வெக்கமில்லாம வளையவர்றாளே!"

"நல்ல குடும்பத்துப் பொம்பளயா இருந்தா அதெல்லாம் இருக்கும், இவதான்...."

இப்படியான விமர்சனங்களை நான் புன்னகையுடனேயே எதிர்கொள்ளுவேன். ஒருநாளா? இருநாளா? கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமாக இதுபோன்ற விமர்சனங்களைக் கேட்டுவருகிறேன். முகத்துக்கு முன்னால் சில, முதுகுக்குப் பின்னால் சில!

முதன்முறை எதிர்கொண்டபோது பதறித் துடித்திருக்கிறேன். பதில் சொல்லத்தெரியாது திணறித் தவித்திருக்கிறேன். உண்மையிலேயே தவறு செய்துவிட்டேனோவென்று என்னைநானே சுயபரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன்.முடிவில் நான் செய்த தவறெனக் கண்டறிந்தது, 'என் வாழ்க்கையை மீட்டெடுத்ததே' என்பது புரிய இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டமென்று அலைபாய்ந்துகொண்டிருந்த மனதை ஆசுவாசப்படுத்தினேன்.

எனக்குச் சொந்தமான பொருளொன்று மற்றவர் கைகளில் ஒரு தாயக்கட்டை போல சிக்கிக்கொண்டு உருட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அது என்னுடையதுதான் என்பதையும் அது என்னிடமிருந்து களவாடப்பட்டுவிட்டது என்பதையும் உணர்ந்துகொள்ளவே எனக்குப் பலகாலம் பிடித்தது. அதைக்கூட அறிய இயலாத மடமையுடன் வாழ்ந்திருக்கிறேனே என்று நினைக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. அதை அவர்கள் கைகளிலிருந்து மீட்பதற்குள் எத்தனை இடர்கள்? துயர்கள்? சீற்றங்கள்? தூற்றல்கள்?

போதும் உன் சுயபுலம்பல், கதைக்கு வா என்கிறீர்களா? வருகிறேன், வருகிறேன். அதற்குமுன், இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு என்ன வயது என்று நினைக்கிறீர்கள்? முப்பது....? நாற்பது....? ஐம்பது....?

கணித்துவைத்திருங்கள், கடைசியில் சொல்கிறேன்.

எனக்கு உரித்தான பெண்ணியக் கோட்பாட்டுப் பத்திரங்கள் நான் பெண்ணாய்ப் பிறந்த அன்றே வறுமையின் காரணமாய் அடுப்பெரிக்கப் பயன்பட்டுவிட்டன. அதற்குமுன் என் அம்மாவினுடையதும், என் மூத்த சகோதரிகள் மூவருடையதும் எரிக்கப்பட்டிருந்தன.

அம்மா என்ன செய்வாள்? அடங்கிப்போவதும் அடுப்பெரிப்பதுமே பெண்ணின் இலக்கணம் என்று போதிக்கப்பட்டு வளர்ந்தவள். தன் கருப்பை கட்டாய ஓய்வுபெறும் நாள்வரை பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரமாய் வாழ்ந்த அவள், குழந்தைப்பேறு போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்து வேறெப்போதும் தன்னிருப்பை வெளிப்படுத்த முனைந்ததேயில்லை.

அப்பாவைப் போலவே அம்மாவும் எங்களை 'பொட்டச்சிகள்' என்றோ 'பொட்டக்கழுதைகள்" என்றோதான் குறிப்பிடுவாள். அவள் தன்னை என்னவாக நினைத்திருப்பாள்?

பெண்கள் படித்தால் தலைக்கனம் மிகும் என்று என்னையும் பள்ளிக்கு அனுப்ப மறுத்த அப்பாவுக்குப் பின் நின்றுகொண்டு ஆமாம் போட்டாள், அம்மா. படித்தால் தலைக்கனம் மிகத்தான் செய்யும். படித்து அறிபவற்றை மூளையில் முடக்காமல் மூலையிலா முடக்கமுடியும்? சேகரிக்கப்பட்ட அறிவின் தாக்கத்தால் தலை கனப்பது உண்மைதானே! தலைக்குமேல் கனமிருந்தபோதும் கரகாட்டக்காரியால் நிலைதடுமாறாமல் ஆடமுடியும் என்றால் படித்த பெண்ணால் நிலைதடுமாறாமல் வாழமுடியாதா?

என்னவோ அப்போது எனக்கிருந்த பொல்லாத பிடிவாதம் (அம்மா அன்று அப்படிதான் சொன்னாள்) என்னைப் பள்ளிக்கு அனுப்பியதுடன் உபரியாக சில அவப்பெயர்களையும் பெற்றுத்தந்தது. இவ்வளவுக்கும் குனிந்த தலை நிமிராது, ஆண்பிள்ளைகளின் காலடி பார்த்து விலகி, கண்பட்டையும் கடிவாளமுமிடப்பட்ட ஒரு வண்டிக்குதிரை போல் வளையவந்துகொண்டிருந்தேன். ஆயினும் தொழுவம் தவிர வேறுலகம் அறியா, மூக்கணாங்கயிறிடப்பட்டிருந்த வீட்டுப்பசுக்களை ஒத்திருந்த அக்காக்களே பெண்ணின் பெருமையைப் பறைசாற்றவந்த மங்கையர் திலகங்கள், மாதர்குல மாணிக்கங்கள் என்றெல்லாம் மெச்சப்பட்டனர்.

அப்புறம் பெண்களின் திருமணம் பற்றிய பெருமூச்சுகள் காதில் விழத்துவங்கின.

"இந்தப் பொட்டச்சிகளை எப்படிக் கரையேத்துறது?"

"இவளுகள எவங்கையிலயாவது புடிச்சிக்குடுக்குறவரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டிருக்கமாதிரியில்ல இருக்கு?"

"ஏதாவது தோதான எடமா வந்தா புடிச்சித் தள்ளிடலாம்"

அம்மாவும் இதுபோன்ற பேச்சுகளைப் பேசுவதைக் கேட்க வியப்பாக இருக்கும். அவளும் இதுபோல் பிடித்துத் தள்ளப்பட்டவள்தானே என்று நினைத்து மனம் சமாதானமாகும்.

அக்காக்கள் திருமணமாகிப் போகும் ஒவ்வொருமுறையும் பார்ப்பதற்கு பசுக்களை சந்தைக்கு ஓட்டிச்செல்வது போலத்தான் இருக்கும். மாடுகளுக்கு இந்தத் தொழுவம் விட்டால் இன்னொரு தொழுவம் போல, அக்காக்களுக்கும் இந்த வீட்டு அடுப்படி விட்டால் இன்னொரு வீட்டு அடுப்படி! கூடுதலாய் படுக்கையறை கிட்டலாம். அவ்வளவே!

அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் என்று சொன்னால் விறகடுப்பு, உமி அடுப்பிலிருந்து மண்ணெண்ணெய் அடுப்புக்கும், வசதி பெருக்கம் காரணமாக எரிவாயு அடுப்பிற்கும் மாறநேர்ந்ததைக் குறிப்பிடலாம். சிந்திக்கத் துவங்கிய அவர்களது மூளைகள் சேதமுற்றுவிடாதிருக்க, வானொலி, தொலைக்காட்சி போன்ற சில பெட்டிகள் பரிசளிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் மூளைகளை அவற்றில் பத்திரப்படுத்திவைக்கப் பழக்கப்படுத்தப்பட்டனர், இனி வாழ்நாள் முழுவதும் எந்தச் சிந்தனையுமற்று மகிழ்வாகக் களிக்க!

என் கதைக்கு வருகிறேன். எனக்குத் திருமணம் பேசப்பட்டபோது நான் கல்லூரியில் படிக்க ஆசை கொண்டிருந்தேன்.

'நான் படிக்கணும், உத்யோகம் பாக்கணும்" என்ற என் லட்சியம் அனைவராலும் அலட்சியப்படுத்தப்பட்டது. 'இத்தனநாள் ஒன்ன விட்டுவச்சதே தப்பு' என்று தன் தவறை காலந்தாழ்ந்து உணர்ந்தவராய் அப்பா சீறினார். என் ஆசைகள், கெஞ்சல்களாகவும், வேண்டுதல்களாகவும், வீம்பாகவும் மாறி முடிவில் கதறல்களாக உருவெடுத்தபோது காதலென்று புதுவிளக்கம் கற்பிக்கப்பட்டிருந்தன.

'எவனடி மனசில நெனச்சிகிட்டு கல்யாணம் வேணாங்கிறே?' என்ற அண்ணன்களின் நாவீச்சு கண்டு நடுநடுங்கி மிரண்டு நின்ற என் கையாலகாத நிலை, என் ஒப்புதலெனவேக் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டது. வலி படைத்த கரங்கள் பலவும், எனக்கு வலி படைத்து என் போராட்டத்தை ஒடுக்கின. அக்காக்கள் என்னை அதிசயமாய்ப் பார்த்து, "அடி, ஏண்டி இப்படி அடிவாங்கிச் சாவுற? அண்ணனுங்க சொல்றவரக் கல்யாணம் கட்டிகிட்டு எங்கள மாதிரி சந்தோஷமா வாழறத விட்டுட்டு ஏண்டி இப்படி ஓடுகாலியாட்டம் திரியிற?" என்று அறிவுரை பகன்றனர்.

பலங்கொண்ட யானைதான்! இருப்பினும், பின்புறம் பாய்ந்து முதுகிலேறி, கழுத்தைக்கவ்வும் தந்திரமிக்க சிங்கக்கூட்டத்தின் முன் அது என்ன செய்யும்?

நானும் அப்படிதான் திக்பிரமையுற்று திகைத்துநின்றவேளை, திருமணம் முடிக்கப்பட்டுவிட்டது. விதியை முழுதாய் நம்பும்படி என் வாழ்க்கை அமைந்துவிட்டதை எண்ணி, நொந்த என் மனதைத் தேற்றினேன். ஆயினும் நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் ஏதோ ஒன்று கனன்றுகொண்டே இருந்தது. அது என்னவென்று அப்போது புரியவில்லை.

பிறந்தவீட்டில் கேட்டிருந்த பெண்களுக்கான குறியீட்டு வார்த்தைகள் புகுந்தவீட்டிலும் புழங்கப்பட்டன.

"பொட்டக்கழுதைக்கு எவ்வளவு திமிர்?"

"பொம்பளயா லட்சணமா வீடடங்கி இரு!"

"ஏய், வாய மூடு, ஆம்பளைங்க பேசும்போது குறுக்கபேசிகிட்டு?"

"ஒனக்கு ஒரு எழவும் தெரியாது, சும்மா இரு,"

"கோழி கூவி பொழுது விடியாதுடி, வாயத் திறந்தே....ஒரே மிதிதான்"

கொஞ்சம் கொஞ்சமாய் அந்நஞ்சு பிஞ்சுகளின் மனதிலும் ஏற்றப்படுவதைத் தடுக்க எவ்வளவோ போராடியும் பலன் பூஜ்யமானது.

தோளுக்கு மேல் வளர்ந்த இரு பிள்ளைகளும், "ஒனக்கு ஒரு மண்ணும் தெரியாது, வாய மூடிகிட்டிரு." என்று அறிவுறுத்தியபோதுதான் சொரேரென்று பின் மண்டையில் தாக்கம் உணர்ந்தேன்.

உண்மைதான்! எதுவுமே தெரியாமல்தான் இத்தனை வருடங்களைக் கடத்தியிருக்கிறேன்! நானும் என் அம்மாவைப்போல், அக்காக்களைப்போல், அண்ணிகளைப்போல் வெளியுலகம் அறியாமல், வெளியுலகத்துக்கு என்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் வெந்ததைத் தின்று விதி வந்தால் மாய்ந்துபோகவேண்டியதுதானா?

எனக்கென்றொரு சுயம் இருந்திருக்கவேண்டுமே! எங்கே எப்போது தொலைத்தேன் அதை? ஒரு தேக்கரண்டி காணாமல் போனாலும் அதைக் கண்டுபிடிக்கும்வரை தவியாத் தவிக்கும் எனக்கு....என் சுயவாழ்க்கை தொலைந்த சுவடு கூட உணரப்படாமல் எப்படி இத்தனைக்காலத்தைக் கடத்தமுடிந்தது?

யோசிக்க யோசிக்க, எனக்குள் வெறி மிகுந்தது. நான் யார்? என் வாழ்க்கையின் இலக்குதான் என்ன? இப்படி ஒரு இலக்கற்ற படகில் பவனி வர எனக்கொரு வாழ்க்கை எதற்கு? சுவடுகளை விட்டுச் செல்லாத வானவில் வாழ்க்கையா என் வாழ்க்கையும்?

அடங்கியிருந்த என் தாகம் மூழ்கடிக்கப்பட்ட இரப்பர் பந்துபோல பெரும் தாக்கத்துடன் மேலெழுந்தது. அது இப்போதைக்கு தீரவே தீராத தாகம். பெண்ணியம் காக்கும் போராட்ட தாகம்! என் தாகத்துக்கு தணிப்பானில்லை. வேட்கை அதிகரிக்க அதிகரிக்க என் வேட்டையும் ஆரம்பமானது.

என் வாழ்க்கையை நானே வாழவிழைந்தேன். களவாடியவர்களிடம் என் வாழ்க்கையை என்னிடமே கொடுத்துவிடுங்கள் என்று மன்றாடிக் கேட்டிருக்கவேண்டுமாம். கேட்டாலும் கொடுப்பதைப் பற்றி ஆலோசித்திருப்பார்களாம். என்னுடையதை நான் பெற நான் ஏன் மன்றாடவேண்டும்? நானே கைப்பற்றிக்கொண்டேன். அதுதான் நான் செய்த தவறாம். வாழ வக்கற்றவள் என்றும் பெண்ணின் பெருமையைக் குலைத்து வீதியில் நிறுத்தியவள் என்றும் வசைபாடப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

இன்னாரின் மகள், இன்னாரின் மனைவி, இன்னாரின் தாய் என்று இதுவரை அறியப்பட்டிருந்த நான், இன்று நானாகவே அறியப்படுகிறேன். அது எத்தனைப் பெருமை! இதுதானே என் பெண்மையின் அடையாளம்!

"திமிர் பிடிச்ச பொம்பள!"

"பொம்பளயா அவ? இந்த வயசில டைவர்ஸ் எதுக்கு?"

"ஊரே சிரிச்சிப்போச்சு! புருஷனையும் புள்ளங்களையும் தலைகுனியவச்சிட்டாளே?"

"இத்தனவருஷம் வாழ்ந்தவளால சொச்சகாலத்த வாழமுடியாதா?"

"எல்லாம் காலக்கொடுமை, இந்தக்கூத்தையெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையில எழுதியிருக்கு!"

என் புதிய எழுச்சி கண்டு இப்படிதான் என்னைக் குற்றஞ்சாட்டி பல சுட்டுவிரல்கள் நீண்டன. நீண்ட அந்த விரல்களின் நுனிகள் நெருப்பாய்ச் சுட்டன. அந்த விரல்களில் பல, பெண்களுக்குச் சொந்தமானவை என்பதுதான் எனக்கு வியப்பைத் தந்தது. என் கண்ணில் கனன்ற கனல்கண்டு அவை நடுங்கிப் பின்வாங்கின. ஆனாலும் முதுகுக்குப் பின் முறையிட்டன.

என்னை விமர்சிக்கும் பெண்கள் பற்றி நான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. தன்னால் இயலாத ஒன்றை இன்னொருவர் செய்தால் சிலர் வயிறெரிவது இயல்புதானே? இந்த வயிற்றெரிச்சலே அவர்களது வருங்கால வாழ்வுக்கு வித்தாக அமையலாம். தன் வாழ்க்கையைத் தானே வாழ இயலலாம், விவாகரத்து கோராமலே!

சரி, இப்போது என் வயதென்ன, யூகிக்கமுடிந்ததா உங்களால்? அதிகமொன்றுமில்லை, இந்த ஆடி போய் ஆவணி வந்தால்.......அறுபத்தேழுதான்!

என்னவோ பெரிதாய் கதை சொல்கிறேன் என்றாயே, இதைத்தானா? இன்று நம் நாட்டில் பல பெண்கள் வாழும் இயல்பு வாழ்க்கைதானே, இதற்காகவா இந்த வயதில் விவாகரத்து பெற்று, அபலை இல்லமொன்றில் ஆயா வேலை பார்த்துப் பிழைக்கிறாய் என்கிறீர்களா? பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வையைப் புரிந்துகொள்ளமுடிகிறதே உங்கள் வார்த்தைகளால்!

1 comment:

  1. இன்னும் பல குடும்பங்களில் , "பொட்டக்கழுதை, பொட்டச்சி .. சொற்களால் வசைப்படிக்கொண்டு தான் இருக்கிறார்கள், நல்ல ஒரு கதை.இன்னும் பெண்களை ஒரு பாரமாக மற்றும் குடுப்பத்தில் ஆண்களிடம் தான் எதையம் கலந்து ஆலோசிகிறர்கள் , இவை எல்லாம் மாறவேண்டும்

    ReplyDelete