Wednesday, April 27, 2016

முதியோர் இல்லம்




தாமு முதியோர் இல்லம், சென்னையில் புறநகர் பகுதியில் இருந்தது. அந்த இல்லத்தைச் சுற்றி மரங்கள், பூச்செடிகள், பறவைகள் என்று அழகாக இருக்கும். அதன் உள்ளே சென்றால் அது சென்னை என்று நமக்கு தோன்றாது. இன்று அந்த இல்லம் இன்னும் அலங்காரமாக இருந்தது, இல்லத்தின் 25-வது ஆண்டு விழா அதாவது வெள்ளி விழா. இல்லத்தில் இருக்கும் அனைவரும், அவர்களின் குடும்பமும் வந்து இருந்தார்கள். அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தாத்தா பாட்டிகள் நடனம், பாட்டு, உடை அலங்காரம் என்று தூள் பண்ணினார்கள். பாட்டிகள் ஆடை அலங்கார அணி வகுப்பில் வெட்கப்பட்டு நடந்து வர, தாத்தாக்களும் பேரன்களும் விசில் அடித்தார்கள்.

நிகழ்ச்சி அருமையாக நடந்து முடிந்தது. இறுதி நிகழ்ச்சியாக கலந்துரையாடல் வைத்தார்கள், அனைவரும் சிற்றுண்டி முடித்து விட்டு பேச வந்தார்கள். முதலில் இல்ல நிர்வாகி ராஜலட்சுமி அம்மாள் பேசினார்.

"அனைவருக்கும் வணக்கம் இந்த இல்லம் கட்டி இன்றுடன் 25 வருடம் ஆகிறது, இது என்னுடைய கணவரின் ஆசை அவர் இப்போது உயிருடன் இல்லை மேலே இருந்து சந்தோஷபடுவார் என்று நம்புகிறேன்" என்று மேலே பார்த்து அழுதாள் 75 வயதான பாட்டி, கண்களை துடைத்துக் கொண்டு " இந்த வெற்றிக்கு இங்கு இருக்கும் இல்லத்தின் உறுப்பினர்கள்தான் காரணம் அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார். முதலில் வந்தது திரு.சேகர்

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் மனைவியும் என்கூடத்தான் இருக்கா. அதனால் இரட்டிப்பு சந்தோஷம். நன்றி" என்றார் சேகர்.

"வணக்கம் என் பேர் சீனு, ரீடையர்டு கஸ்டம் ஆபிஸர் இங்கு எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குது சந்தோஷமா இருக்கேன்.என் மனைவி போய்ட்டா 10 வருஷம் முன்னாடி......... நன்றிகெட்ட என் மகன் வீட்டில் எச்சில் சாதம் சாப்பிட்டுகிட்டு இருந்தேன். மகராசி மருமகளை நான் தேடித்தேடி பிடித்து என் மகனுக்கு கட்டி வச்சேன். அவ தான் என்ன இங்க அனுப்பிச்சிட்டா. என்னடா இப்படி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மகன் இன்றைக்கும் வரலை. அவன் எனக்கு செய்ததுக்கு அவன் பிள்ளை அவனுக்கு பதில் சொல்வான்.... ஆனா நீங்க எல்லோரும் வந்து இருக்கீங்க சந்தோஷம், என் வார்த்தைகள் வழியா உங்க பெத்தவங்களின் ஆசைகளை புரிஞ்சிக்கோங்க" என்று முடித்தார்.

"வணக்கம் என் பெயர் மேரி, என்னுடைய பொண்ணு அமெரிக்காவுல இருக்கா, என்னையும் அங்கே அழைச்சிட்டு போறதா சொல்லினு இருக்கா.......6 வருஷமா (அவரின் குரல் தழுதழுத்தது). மத்தபடி நான் சந்தோஷமா தான் இருக்கேன்"

"வணக்கம் என் பெயர் வாசுதேவ், நான் இங்கயே தான் கடைசிவரை இருப்பேன். நான் யாரையும் நம்பி இல்லை, நான் பார்த்து வளர்த்தவர்களிடம் நான் போய் கையை கட்டி நிக்க முடியாது, என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவன், நான் சந்தோஷமா இருக்கேன், ஆண்டவன் பார்த்துப்பான். நான் யாரையும் நம்பி இல்லை............... என்ன என் பேரக்குழந்தைகளை தான் பார்க்கனும் போல மனசு அடிச்சிக்குது" என்று கண்கலங்கினார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சுந்தரேஸ்வரன் தன் மனைவியை கைத்தாங்கலாக முன் வரிசைக்கு அழைத்து வந்து உக்காரவைத்தார். அவர் இல்லத்தின் மூத்த உறுப்பினர் இருபது வருடங்களாக இந்த இல்லத்தில் இருக்கிறார், வயது 80. அவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

"எல்லோருக்கும் என்னுடைய சார்பாவும் என் மனைவியின் சார்பாவும் வணக்கம், நான் பேசுவதை தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் அறிவுரை கூறப்போவது பிள்ளைகளுக்கு இல்லை உங்களுக்குத்தான். வயதானவர்கள் எல்லோரும் அவரவரின் கெளரவத்தை தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். நீங்கள்  உங்கள் பிள்ளைகள் கெட்டவர்கள் என்று ஏன் உங்களையே இப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?. நாம் ஜென்மம் எடுத்து ஓடி ஓடி சம்பாதித்தது எல்லாம் அவர்களுக்குத்தானே. அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஏன் இப்படி அவர்களுக்குச் சாபம் கொடுக்கிறீர்கள். அனைவருக்கும் அந்ததந்த வயதில் வரவேண்டிய முதிர்ச்சி வந்துடும். குழந்தையா இருக்கும் பொழுது தாய்பால் தான் உலகம்னு இருந்தோம், அப்புறம் பொம்மைகள், அப்புறம் விளையாட்டு, நண்பர்கள், பெண்கள், மனைவி, குழந்தைகள்ன்னு நம்முடைய ஆசைகள் லட்சியங்கள் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கு. இது என்னமோ உங்க பிள்ளைகள் மட்டும் தான் செய்யறத நினைக்கறீங்க, நாம எல்லோரும் வாலிப வயதில் அப்படித்தான் இருந்தோம். நம் பெற்றவர்களைக் கேட்டால்தான் நம்ம யோக்கியம் தெரியும். உங்கள் கடமை அவ்வளவுதான் முடிந்து விட்டதுனு நினைத்த பின் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இருக்காதீங்க. தனியாக மனைவியுடன் வீடு எடுத்து வந்துடுங்க, இல்லை இந்த மாதிரி இல்லங்களில் வந்து தந்கிடுங்க. உங்களிடம் அதற்க்கான பணம் இல்லையா உங்கள் பிள்ளைகளிடம் வாங்கிக் கொண்டு தங்குங்க. இந்த மாதிரி நான் சொல்வது பிள்ளைகளை நிர்கதியாக விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அவர்களை அவர்களின் வாழ்க்கையை வாழவிடுங்கள், சந்தோஷமோ சோகமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.."

"அப்ப பேரபிள்ளைகளை எல்லாம் பார்க்கறது தப்பு சொல்றீங்களா?" என்றார் ஒருவர்.

"பார்க்கறது தப்புனு சொல்லல, பிள்ளைகள் வீட்டுல் இருந்துகொண்டு அவர்களை பார்த்துக்கறது தப்புன்னுதான் சொல்றேன்"

"அப்படியே விட்டால் தாத்தா பாட்டி என்ற பாசம் இல்லாம போய்டுமே"

"பாசம் என்பது பக்கத்துலே இருந்த தான் வரும்னு இல்லை, பாசத்துக்கு தூரக்கணக்கு எல்லாம் இல்லை. நாம நடந்துகறதுல தான் இருக்கு"

"அப்போ பிள்ளைங்கல கல்யாணம் செய்து கொடுத்தாச்சினா அவ்வளவுதான் நாங்க காசி களம்பனும் சொல்றீங்க"

"காசிக்கு போகச் சொல்லல, உங்க வாழ்க்கையை இன்னொரு ஹனிமூன்ல இருந்து தொடங்கச் சொல்றேன், (கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்) ஆமா வாழ்க்கையை இனிமேல் உங்க மனைவிக்காக மட்டும் செலவு பண்ணுங்க, மனைவி இல்லாதவங்க மேட்ரிமோனியில் பதிவு பண்ணுங்க" (மறுபடியும் கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்). பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நாம் ஏன் அவர்களை சபிக்கவோ இல்லை திட்டிக்கொண்டோ இருக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழவிடுங்கள். நான் இந்த இல்லத்துக்கு வந்த கதையை நீங்கள் கேட்டீங்கனா சிரிப்பு வரும்.(என்று தன் மனைவியை திரும்பி பார்த்தார், அவர் சொல்ல வேண்டாம் என்பது போல சிரித்தபடி கையை ஆட்டினார், இவரும் சிரித்துக் கொண்டு) நாங்கள் என்னுடைய மகன் வீட்டில்தான் தங்கி இருந்தோம். என் மகன் மருமகளுக்கு பட்டு புடவை வாங்கித்தரும் போதெல்லாம் எனக்கு இங்கே ஒவ்வொரு பல்லாக உதிரும், தனக்கும் அதே மாதிரி வேண்டும் என்பாள், வாங்கிக் கொடுத்தால் அதை கட்டமாட்டாள், அது அப்படியே பீரோவில் தூங்கும் . இதே என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு வாங்கி கொடுத்தாள், இவள் அவ்வளவு சந்தோஷமாக இருப்பாள். அதான் பெண்களின் மனது. அப்ப முடிவு எடுத்தேன் இங்க வரவேண்டும் என்று இது உங்களுக்கு சிரிப்பா கூட இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியா பார்த்தீங்கனா, அந்த மனோபாவம் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். இப்போ வாரம் ஆனா என் மகன் குடும்பம் இங்கே இல்லத்துக்கு வந்துடுவாங்க நாங்க எல்லாரும் அவுட்டீங் போவோம், என் மருமகள் எங்களுக்கு பிடிக்குமேனு ஆசை ஆசையா சமச்சி எடுத்துனு வரா. இங்க நாங்களும் சந்தோஷமா இருக்கோம், காரணம் இங்கே இருக்கறவங்க எல்லாம் என்ன மாதிரி வயதானவர்கள், என்னை மாதிரி கூன் விழுந்தவர்கள், கண் பார்வை மங்கியவர்கள், சத்தமாக பேச முடியாதவர்கள், இது என் இனம். எனக்கு பிள்ளை வீட்டில் இருக்கும் போது கஷ்டமாக இருக்கும் எல்லாரும் ஓடி ஆடி வேலை செய்வார்கள் என்னால் அப்படிச் செய்ய முடியாது, அவமானமாக இருக்கும், இந்த மூப்பு மேல் கோபமாக வரும் அதை எல்லோரிடமும் காட்ட ஆரம்பித்தேன்.

ஆனால் இங்கு என்னைப் போலத்தான் எல்லாரும். உண்மை புரிய ஆரம்பித்தது. அதனால் முதியவர்களே உங்களின் இறுதி வாழ்க்கை தன்மானத்துடன் கழிக்க இந்த மாதிரி நல்ல இல்லங்களில் சேருங்கள். பிள்ளைகளே உங்களின் பிற்கால வாழ்க்கைக்கு இப்பவே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், நன்றி " என்று அமர்ந்தார். அனைவரும் எழுந்து நின்று கையை தட்டினார்கள்.

இல்லவிழா நன்றாக முடிந்தது. அந்த இல்லத்தில் ஒரு மாதத்தில் பல பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பலரின் பெற்றோர்கள் இல்லத்தில் வந்து சேர்ந்தார்கள்.

No comments:

Post a Comment