Sunday, April 10, 2016

தேர்தல் பரீட்சைக்கு ரெடியா?

ண் மூடித் திறப்பதற்குள், மே 16 வீறுநடைபோட்டு வந்துவிடும். வாக்காளர் அடையாள அட்டையுடன், விரலில் மை வாங்கி, பொத்தானை அமுக்கக் கெத்தாகக் கிளம்பவேண்டியதுதான். வேட்பாளர்கள் ஆயிரம் அலப்பறைகள் செய்தாலும் அவர்களது தலைவிதியை, 2016-ம் ஆண்டின் முதலமைச்சரை, தமிழகத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் சக்தி நம் விரலுக்குத்தான் இருக்கிறது. ஆக, வாக்களிக்கப்பதற்கு முன் நீங்கள் மோட்டுவளையைப் பார்த்து சிந்திக்கச் சில கேள்விகள். இதற்கு எல்லாம் பதிலை யோசித்துத் தெளிவு கிடைத்துவிட்டால், நீங்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டீர்கள் என அர்த்தம். பேனா, பென்சில், அடிஸ்கேல், அழிரப்பர் சகிதம், ம்... ஆரம்பமாகட்டும்!

1. உங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வின் முகம் நினைவில் இருக்கிறதா? எனில், அவரைக் கடைசியாக எப்போது, எங்கே பார்த்தீர்கள்?

அ) முதல்வரின் வாகனம் முன்னர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து டயரை மோப்பம்பிடித்துக்கொண்டிருந்தபோது.

ஆ) வாட்ஸ்அப்பில் வந்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றில்.

இ) என்றும் அம்மாவின் அடிமைத் தொண்டன்ரக விளம்பரங்களில் மட்டும்.

2. பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்...இவர்கள் எல்லாம் யார்?

அ) சாலையோர சிலைகளில், கட்சிகளின் கொடிகளில், விளம்பரங்களில் போஸ் கொடுக்கும் மாடல்கள்.

ஆ) சீனியர் சிட்டிசன்களின் வாக்குவங்கிகளில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள்.

இ) அந்தக் காலத்துல...வகையறா கதைகளில் மட்டும் வாழ்பவர்கள்.

3. தேர்தலில் ஓட்டு போட என்ன தேவை?

அ) பணம் / குவார்ட்டர் + பிரியாணி / பரிசுப்பொருள்

ஆ) சகிப்புத்தன்மை, கழிவிரக்கம், ஞாபகமறதி, இலவசங்கள் வாங்கியதற்கான நன்றிக்கடன்.

இ) `போன முறை அதுன்னா, இந்த முறை இதுஎன மாற்றி மாற்றிக் குத்தும் கிறுக்குத்தனம்.

4. ஓ.பன்னீர்செல்வத்தின் எட்டு மாத கால ஒப்பற்ற ஆட்சியில் நிர்வாகம் எப்படி இருந்தது?

அ) காவடி, பால்குடம், தீ மிதி, மண்சோறு, யாகம் என்று கோயில்களில் ஸீன் போட்டுக்கொண்டிருந்தது.

ஆ) சைலன்ட் மோடில் சயனம்கொண்டிருந்தது.

இ) அழுவாச்சி காவியம்எழுதிக்கொண்டிருந்தது.

5. தேர்தல் வாக்குறுதிகள் என்பது என்ன?

அ) ஆட்டுக்குட்டி இடும் முட்டை.

ஆ) சென்ற தேர்தல் வாக்குறுதிகளோடு மானே தேனேபோட்டு கிண்டிப் பரிமாறப்படும் சம்பிரதாய உப்புமா.

இ) கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

6. கடந்த ஐந்தாண்டு காலத்தில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வின் உச்சபட்ச சாதனை என்ன?

அ) அமைச்சரவை மாற்றப் பட்டியலில் பலமுறை இடம்பிடித்து, பதவி பிடுங்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் இழந்தது.

ஆ) சட்டசபையில் இயந்திரம்போல மேசையைத் தட்டியது - அங்கே மற்ற எம்.எல்.ஏக்களைவிட அதிகமுறை அம்மாஎன முழங்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியது.

இ) உளவுத்துறைக்கும் உள்ளூர் மக்களின் தர்ம அடிக்கும் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது.

7. மக்கள் நலக் கூட்டணி என்ற கேப்டன் விஜயகாந்த் அணியின் கொள்கை என்பது என்ன?

அ) உளறினாலும் உதைத்தாலும் துப்பினாலும் தூக்கியடித்தாலும் கேப்டனை முதல்வராக்கியே தீருவது.

ஆ) தினமும் காலையில் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் சென்றுவிட்டு, தெருமுனைக் கடையில் டீ குடிப்பது.

இ) `அ.தி.மு.க-தான் எதிரிஎன்று சொல்லிக்கொண்டே, தி.மு.க-வுக்கு ஸ்கெட்ச் போடுவது.

8. ஐந்து ஆண்டு கால அம்மா அரசின் அபார சாதனை என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது?

அ) பெங்களூரு நாட்கள்.

ஆ) தமிழகத்துக்கே பச்சை பெயின்ட் அடித்தது.

இ) எங்கும் டாஸ்மாக், 110 விதி, காணொளி ஆட்சி, செம்பரம்பாக்கம், ஸ்டிக்கர், எண்ணிலடங்கா இன்ன(ல்) பிற.

9. ஆறாவது முறை கருணாநிதி முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால், என்ன செய்வார்?

அ) அந்தச் சாதனைக்காக சுமார் 600 பாராட்டு விழாக்களை நடத்தி, புகழ் மழையில் குதூகலிப்பார்.

ஆ) முதல்வர் கனவுடன் இருக்கும் சீனியர் சிட்டிசன், ஸ்டாலினைப் பார்த்து, `ஆர் யூ ஓ.கே பேபி?' என்பார்.

இ) ஓய்வறியா சூரியனாக உழைத்துக்கொண்டே இருப்பார் - குடும்ப நலனுக்காக.

10. கீழ்க்கண்டவற்றில் எது 100 சதவிகிதம் உண்மை?

அ) நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்றால்உங்கள் முப்பாட்டன் வரை தமிழன்தான் என்று நிரூபிக்கும் மரபணு பரிசோதனைச் சான்றிதழ் வேண்டும்.

ஆ) சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவால், அ.தி.மு.க பலம் பன்மடங்கு பெருகியிருக்கிறது.


இ) பம்பரம் என்பது தனக்குத்தானே ஆணிஅடித்துக் கொண்ட பொருள்.
  

No comments:

Post a Comment